ஒரே நாளில் 10,000 சோதனைகள்.. 24 மணி நேரத்தில் ரிசல்ட் : நாட்டில் 3 நகரங்களில் உயர் திறன் கொண்ட பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

புதுடெல்லி: முக்கிய நகரங்களில் அதிநவீன கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொடூர  கொரோனா வைரசால், உலகளவில் இதுவரை 1.64 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.52 லட்சம் பேர் வரை இறந்துள்ளனர். அதே போல், இந்தியாவிலும் 14.35 லட்சம் பேர் பாதித்தும், 32 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்.  இதற்கிடையே, கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இருப்பினும், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் அதிநவீன கொரோனா சோதனை மையங்களை டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம்  மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

கொரோனா பரிசோதனை மையம்:

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவுகளை உடனடியாக அறியும் வகையிலும் அதிநவீன பரிசோதனை மையங்கள் செயல்படவுள்ளன. இந்த மையங்கள் மூலம்  நாளொன்றுக்கு 10 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த பரிசோதனை மையங்களில், கொரோனாவை தவிர வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம். ஹெபடைடிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி, மைக்கோபாக்டீரியம் காசநோய், சைட்டோமெலகோவைரஸ், கிளமிடியா, நைசீரியா, டெங்கு போன்றவற்றுக்கு சோதிக்க முடியும்.

* 3 முக்கிய நகரங்களில் அதிநவீன கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் ஐ.சி.எம்.ஆர்-தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

* மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஐ.சி.எம்.ஆர்-இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான ஆராய்ச்சி நிறுவனம்.

* மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் காலரா மற்றும் என்டெரிக் நோய்கள்.

Related Stories: