×

ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை காத்திடுக; ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 பண உதவி வழங்கிடுக : அனைத்து கட்சி கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1

கொரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்!

அ.தி.மு.க. அரசு இதுவரை, கொரோனா மரணங்கள் தொடர்பான எண்ணிக்கையில் போட்ட குளறுபடிகளுக்கு தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மக்களை கொரோனா நோய்ப் பேரிடரிலிருந்து பாதுகாத்திட- குறிப்பாக மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 தீர்மானம்: 2

வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி செய்திடுக!

 மக்கள் இழந்து விட்ட வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் மீட்டிட-  மத்திய மாநில அரசுகள் ரொக்கமாக நிதியுதவி உடனடியாக அளித்திட வேண்டும் என்றும்; தவறாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்து மீதித்தொகையினை, எளிய தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திட வேண்டும் என்றும் அ.தி.மு.க. அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த “கொரோனா முன்கள வீரர்களுக்கான” நிதியுதவி வழங்கிடுக!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிர்த் தியாகம் செய்த  முன்களப் பணியாளர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு - அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும் என்றும், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் உரிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4

உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு - அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிடுக!

தேசத் தந்தை காந்தி  அடிகள் கண்ட கிராம ராஜ்யத்தின் அடிப்படை அம்சமாக அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் செயலைக் கைவிட்டு - கிராமங்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்றும், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திட வேண்டும் எனவும் அ.தி.மு.க. அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5

அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும் காவல் துறை அவலம் !

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய தமிழகக் காவல்துறை தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விலகிச் செல்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது.
இந்தப் போக்கை காவல்துறை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 6

பிற்படுத்தப்பட்டோர் - பட்டியலினத்தோர் - பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்திடுக!

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடங்களையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடங்களையும் வழங்கிட வேண்டும்” என்றும், க்ரீமிலேயர் வருமானத்தில் நிகர சம்பளத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசாணைகளின்படி அறிவித்துள்ள இடஒதுக்கீடு சதவீதங்களை முழுமையாகச் செயல்படுத்திட தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை, அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் - சமூகநீதி பிறந்து தவழ்ந்து வளர்ந்த பெருமைக்குரிய தமிழ் மண்ணிலிருந்து கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7

“நீட்” தேர்வை ரத்து செய்க!  “ப்ளஸ் டூ” மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடுக!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள “நீட்”  தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திட வேண்டும் என்றும், “இந்த ஆண்டு முதல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 8

சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐத் திரும்பப் பெறுக!

தீர்மானம் : 9

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; மக்கள் குரலே மகேசன் குரல்! மகத்தான அந்தக் குரலை, அச்சு - காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்:10

சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; சமூகநீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சான்று!


 இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவினை ஏற்று- நீதிமன்றம் அளித்துள்ள  மூன்று மாத காலம்வரை காத்திராமல் உடனடியாக ஒரு கமிட்டியை அமைத்து,  உரிய முடிவெடுத்து மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே தமிழ்நாடு மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கும் இடங்களில் தமிழக அரசு சட்டப்படி பின்பற்றிவரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும்- பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை  இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


Tags : party meeting , Media, opinion, freedom, monetary aid, all party meeting, 10 resolutions, execution
× RELATED காங்கிரஸ், மற்ற கட்சிகளை விட ஆட்சி...