×

மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு..!!

சென்னை: மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பெறுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எந்த காரணத்தை கொண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற தவறான அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது, ஓ.பி.சி இடஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கான வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைப்போலவே ஓ.பி.சி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Tags : leaders ,High Court ,OBC , Political leaders , High Court verdict, OBC reservation , medical studies ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...