×

கலெக்டர் ஆபீஸ் அரசு டிவிக்கள் திருட்டு முயற்சி பின்னணி என்ன? கணக்கு இல்லாததால் மூடி மறைக்க முயற்சி

திருச்சி: திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை (டிவி) வைக்கப்பட்டுள்ள அறையின் ஜன்னல் மற்றும் கதவை உடைத்து சிலர் டிவிகளை திருட முயற்சித்துள்ளதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் பின்னணியில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் அனைவருக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப்பின் டிவி வழங்குவது நிறுத்தப்பட்டது. டிவி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதால் மாநிலம் மழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்படாமல் ஏராளமான டிவிக்கள் தேக்கமடைந்தன. அந்த டிவிக்களை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவுக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள (ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்) கலெக்டர் சாம்பர் அலுவலக அறையில் வைக்கப்பட்டுள்ளன.கொரானா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டு வருகிறது. எனவே மக்களுக்கு வழங்காமல் தேங்கி கிடக்கும் அரசு டிவிக்களை பள்ளிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி டிவிக்கள் பள்ளிகளுக்கு வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தாலுகாவுக்குரிய டிவிக்களை திருச்சி மேற்கு தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது.

இதையடுத்து, பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டிவிக்களை கணக்கெடுக்க சென்ற இரண்டு தாலுகா அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிவிக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்தே டிவி வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டும், பக்கவாட்டில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தததாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் டிவிக்கள் இடம் மாற்றப்பட்டபோது இருந்த எண்ணிக்கை தற்போது இல்லை என்பதே விஷயத்தின் பின்னணி எனவும், இதை மூடி மறைக்கவே திருட்டு முயற்சி நடந்ததாக அதிகாரிகள் கதை கட்டிவிட முயற்சிப்பவதாகவும் தகவல்கள் தற்போது கசியத் துவங்கி உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் கூறுகையில், ‘டிவி வைத்திருந்த அறையின் ஜன்னல் உடைந்திருந்ததாக தெரியவந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்தோம். மொத்த டிவிக்களின் எண்ணிக்கை தற்போது கையில் இல்லை. டிவி எண்ணிக்கை லட்ஜர் கிடைத்ததும் கூறுகிறேன்’ என்றார்.
இதுகுறித்து திருச்சி மேற்கு தாசில்தார் குகன் கூறுகையில், ‘அந்த டிவிக்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்கு இன்னும் ஒப்படைக்கவில்லை. அங்கு திருட்டு முயற்சி நடந்ததா எனத்தெரியவில்லை’ என்றார்.

சமூக விரோதிகளின் புகலிடம்
திருச்சி கலெக்டர் அலுவலக பின்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி புறம்போக்கு இடம் உள்ளது. இங்கு முட்புதர் மண்டி காணப்படுகிறது. இந்த இடத்தை சுற்றிலும் சீட்டாடுவது, மதுஅருந்துவது, பாலியல் தொழில் என பல்வேறு சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இந்த புறம்போக்கு இடத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சிலர், கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர் ஏறிக்குதித்தும், சில இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து கிடக்கும் வழியாகவும் கலெக்டர் அலுவலகத்துக்குள் வருகின்றனர். அங்கு அமர்ந்து மது அருந்திவிட்டு மதுபான பாட்டில்களையும், டம்பளர்களையும் வீசிச் செல்கின்றனர். இதை பார்க்கும்போது சமூக விரோதிகளின் புகலிடம் போல கலெக்டர் அலுவலக பின்புறம் காணப்படுகிறது.

Tags : theft ,Government , Collector's Office, government TVs, theft, trying to cover up
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...