×

துறையூர் அருகே தடம் தெரியாமல் போன நாகம நாயக்கம்பட்டி ஏரி: அதிக தண்ணீர் தேங்காததால் விவசாயம் பாதிப்பு

துறையூர்: துறையூர் அருகே நாகமநாயக்கம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 149 ஏக்கர். இந்த ஏரியை நம்பி 5 கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரி தூர்வாரப்பட்டு 60 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த ஏரி போதுமான ஆழமின்றி குறைந்தஅளவே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏரியை தூர்வார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 20 வருடத்திற்கு முன் ஏரியை தூர்வார வந்த அதிகாரிகள் கரையோரம் இருந்த மண்ணை கரை மீது போட்டு கரையை உயர்த்தி விட்டு ஏரியை தூர்வார படாமல் சென்றுவிட்டனர். தற்பொழுது இந்த ஏரியின் உட்பரப்பும் விவசாய நிலபரப்பும் சமமான அளவில் மண் தூர்ந்து உள்ளதால் ஏரிக்குள் தண்ணீர் தேங்காமல் அப்படியே வெளியே சென்று விடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது ஏரி முழுவதும் சீமை கருவேலமரங்கள் மண்டி கிடக்கின்றன. இதுபோல் இந்த ஏரிக்கு வரும் மூன்று நீர்வரத்து வாய்க்கால்களும் தூர்ந்து போய் நீர் வரத்து வாய்க்கால் தடம் தெரியாமல் உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மழை பொழிந்து தண்ணீர் வந்தால், மழைநீர் தேங்காமல் அப்படியே சென்று விடுவதால் விவசாயம் விவசாயம் பாதிக்கபட்டு இப்பகுதி விவசாயிகள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் கிணற்றிலும் தண்ணீர் ஊற்று இல்லாமலும், நிலத்தடி நீர் பாதிக்கபட்டு குடிநீருக்கே அவதிப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே இந்த ஏரியில் உள்ள சீமகருவேல முட்செடிகளை அகற்றி நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி, ஏரியின் உட்பரப்பை ஆழப்படுத்தி, கடைகாலை உயர்த்தி கட்டிதர மாவட்டகலெக்டர் நடவடிக்கை எடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thuraiyur ,Nagama Nayakampatti Lake , Thuraiyur, Nagama Nayakampatti Lake, Water, Agriculture
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி