×
Saravana Stores

மது விற்பனையில் மதுரை மண்டலம் தான் ‘டாப்’: ஒரேநாளில் ரூ.40.75 கோடிக்கு விற்று தமிழகளவில் முதலிடம்: குடிமகன்கள் படையெடுப்பு

மதுரை: மதுரை மண்டலத்தில் ரூ.40.75 கோடிக்கு மது விற்பனையானது. நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், சரக்கு விற்பனையில் தமிழகத்தில், மதுரை மண்டலம் முதலிடம் பிடித்தது. கடந்த வாரமும் மதுரை மண்டலம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தீவிர முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தீவிர முழு ஊரடங்கு என்பதால், நேற்று முன்தினமான சனிக்கிழமை இரவு வரை, வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வதற்காக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள், நீண்ட கியூவில் நின்று சரக்கு வாங்கினர்.

மதுரை நகரில் (வடக்கு) 110 கடைகள், புறநகரில் (தெற்கு) 140 கடைகள் என மொத்தம் உள்ள 250 கடைகளிலும் சரக்கு காலை முதல் இரவு வரை அமோகமாக விற்றது. மதுரை மாவட்டத்தில் மட்டும் சனிக்கிழமையன்று, ஒரே நாளில் சுமார் ரூ.5 கோடி வரை சரக்கு விற்பனையானது.
மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை (வடக்கு, தெற்கு) தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று முன்தினம் (சனி) ஒரே நாளில் மட்டும் ரூ.40.75 கோடிக்கு சரக்கு விற்பனையானது.

இதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.39.40 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.35.09 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.20.82 கோடிக்கும் சரக்கு விற்பனையானது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு சரக்கு விற்பனையாகியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மது விற்பனையில், மதுரை மண்டலம் ரூ.40.75 கோடிக்கு விற்பனை செய்து, முதலிடம் பிடித்துள்ளது. கடந்த வாரமும் மதுரை மண்டலம் ரூ.42 கோடிக்கு சரக்கு விற்பனை செய்து, முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : region ,Top ,Madurai ,citizens ,Tamil Nadu , Liquor Sales, Madurai Region, Tamil Nadu, Citizens
× RELATED விதைகளை பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்கள்!