×

காய்ஞ்சு போன சப்பாத்தி தந்தா எப்படி? பெரியகுளம் மருத்துவமனையில் நோயாளிகள் உண்ணாவிரதம்

பெரியகுளம்: பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கொரோனா நோயாளிகள் நேற்று முன்தினம் இரவு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு 120 படுக்கைகளுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு, 2 மாதமாக தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காததால், சத்தான உணவுகள் வழங்கியும், கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்தா மருந்துகளை கொடுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றால் பாதித்தவர்களை குணப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழங்கிய சப்பாத்தி காய்ந்து போய் இருந்ததால், அனைவரும் சாப்பிடாமல் குப்பைக் கூடையில் போட்டுள்ளனர். பின்னர், இரவு முதல் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். நேற்று காலை மருத்துவமனை நிர்வாகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தது. ஏற்கனவே ஒருமுறை தரமற்ற உணவு வழங்குவதாக கலெக்டருக்கு புகார் சென்றதையடுத்து, உணவு வழங்கும் நிர்வாகத்தை மாற்றினர். தற்போது மீண்டும் அதே புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam Hospital , Chapati, Periyakulam Hospital, Patients, Fasting
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...