×

பரமக்குடி அருகே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளால் நோய் ஆபத்து

பரமக்குடி: பரமக்குடி அருகே தெளிச்சத்தநல்லூர் பஞ்சாயத்து பகுதிகளில் அள்ளப்படாத குப்பைகளால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.பரமக்குடி நகர் பகுதியையொட்டி உள்ளது தெளிச்சத்தநல்லூர். இந்த பஞ்சாயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைபில் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சாலையை ஒட்டிய பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பை நிறைந்து சாலை ஓரங்களில் குவிந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள மாடு, நாய்கள் குப்பைத் தொட்டியில் இருந்து வெளியில் எடுக்கப்படும் குப்பைகளை சிதறி போடுவதால், சாலை ஓரங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது.

இதனால், இந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து தெளிச்சத்தநல்லூர் குடியிருப்புவாசிகள் கூறுகையில், குப்பை அள்ளாமல் தேங்குவதால் சுகாதாரக்சீர்கேடு ஏற்படுவதாக பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், சுகாதார சீர்கேட்டால் மற்ற நோய்கள் வந்துவிடுமோ எனற பீதியில் உள்ளோம். சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Paramakudi , Paramakudi, roadside, rubbish
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...