×

நெல்லுக்கு விலையில்லை, இடுபொருளுக்கு மானியமில்லை குறைகளை கொட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெல்லுக்கு விலையில்லாமலும், இடுபொருளுக்கு மானியமில்லாமலும் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிசான சாகுபடியை தொடர்ந்து, முன்கார் சாகுபடி நடப்பது வழக்கம். முன்கார் சாகுபடி நிறைவு பெற்று பல இடங்களில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. பல இடங்களில் அறுவடை நிறைவு பெற்று கார் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வேளாண் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் கார் சாகுபடிக்கு ஜூன் 1ம் தேதி அணை திறப்பது வழக்கம்.

ஆனால் இவ்வாண்டு ஜூலை மாதம் முடியும் நிலையில், இன்று வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் தண்ணீர் திறப்பு குறித்து உறுதியளித்தாலும், இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் இல்லை.மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தில் 3000 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து முடிந்துள்ளது. ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுடியிருப்பு, தெற்கு பாப்பான்குளம், பொத்தை கால் பாசனம், மூலச்சி, பொட்டல் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி நிறைவு பெற்று, பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. ஆனால் அப்பகுதியிலும், சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அரசு வாணிப கழகம் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை.தெற்கு கோடை மேலழகியான், வடக்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் கால்வாய்களில் தண்ணீர் திறந்திருந்தால் இந்நேரம் நெல் மட்டுமின்றி வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகளும் பயன் பெற்றிருப்பர்.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் பயிர்கள் அனைத்துமே பருவமழையை நம்ப வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து மணிமுத்தாறு பாசன விவசாயி சொரிமுத்து கூறுகையில், ‘‘அம்பை, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இப்போது எந்த கால்வாயிலும் திறந்துவிடப்படவில்லை. இடுபொருட்களுக்கு மானியம், இயந்திர நடவுக்கு மானியம் வழங்கவும் அரசு சார்பில் நடவடிக்கைகள் இல்லை. முன் கார் சாகுபடியில் விளைந்த நெல் மணிகளை  ஒரு மூடை(75கிலோ) ரூ.1000 என விலை நிர்ணயித்து, குறைந்த விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

ஒரு மூடைக்கு குறைந்தபட்சம் ரூ.1300 முதல் 1500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ நெல் ரூ.19க்கு வாங்கப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையம் திறப்பது குறித்து அதிகாரிகளிடம் பேசினாலும் அவர்கள் போனை எடுப்பதில்லை. எனவே விவசாயிகள் கோரிக்கைகளை முறையிடும் வகையில் சமூக இடைவெளியோடு ஒரு கூட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டப்பட வேண்டும்.’’ என்றார்.

Tags : Paddy, no price, no input, no subsidy, farmers
× RELATED தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4...