×

அடிக்கடி விபத்து நடக்கிறது காவு வாங்கும் புதிய மேம்பாலம்: ரவுண்டானா அமைக்கப்படுமா?

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டை - அரசப்பபிள்ளைபட்டி புதிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.  ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பல்வேறு ஊர்களுக்கு விரைந்து செல்லவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் லெக்கையன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை சமீபத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக பழநி, திண்டுக்கல், தாராபுரம், வேடசந்தூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும்.
லெக்கையன்கோட்டையிலிருந்து பைபாஸ் மேம்பாலம் செல்லும் சாலை ஒன்றும், ஒட்டன்சத்திரம் நகருக்குள் செல்லும் சாலை ஒன்றும் பிரிகிறது.

அவ்வாறு பிரியும் இடத்தில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் திசை தெரியாமல் மேம்பாலத்திற்கு செல்வதற்கு பதிலாக நகர் பகுதியில் வந்து விடுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விபத்துதில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதேபோல மேம்பாலம் முடியும் அரசப்பபிள்ளைபட்டியிலும் எவ்வித எச்சரிக்கை பலகையோ, அறிவிப்புகளோ இல்லாததால் அங்கும் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. மேலும் இருளில் வாகனங்கள் எத்திசையில் செல்கிறது என்று தெரியாமல் செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கினால் போக்குவரத்து குறைவாக உள்ளது. வாகன போக்குவரத்து ஆரம்பிக்க தொடங்கினால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  

எனவே மேம்பாலம் ஆரம்பிக்கும் லெக்கையன்கோட்டை பிரிவு மற்றும் மேம்பாலம் முடிவடையும் பழநி ரோடு அரசப்பபிள்ளைபட்டியில் ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.  



Tags : crashes ,Kavu , Ottanchatram, Overpass., Roundabout
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...