×

‘இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ : டீ விற்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பட்டதாரி இளைஞர்

வாடிப்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவர் தமிழரசன். விபரம் அறியா தனது 2 வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தனது அப்பாவின் நண்பர் மூலமாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தங்கி பிஎஸ்சி கல்லூரி படிப்பு வரை பயின்ற தமிழரசன் பிழைப்பு தேடி சென்னை சென்றுள்ளார். அங்கு வேலையும் கிடைக்காமல், உணவும் கிடைக்காமல் தனது கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட உடமைகளையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நின்றுள்ளார். பசியின் கொடுமையால் வேறுவழியின்றி பிச்சை எடுத்தும், பலநேரம் குப்பைத் தொட்டியில் கிடப்பதை கூட உண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். பின் அங்கிருந்து மதுரை வந்த தமிழரசன் வழிப்போக்கனாக அலங்காநல்லூர் வந்து இப்பகுதியிலும் பிச்சை எடுத்து தெரு ஓரங்களில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பொது முடக்கத்தின் போது உணவுக்கு கஷ்டப்பட்ட தமிழரசன் பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.பின் கையில் இருக்கும் தான் சேமித்த பணமும் குறையவே பிழைப்புக்கு வழிதேடிய இளைஞர் பொதுமுடக்கத்தால் தேநீர் கடைகள் இல்லாமல் பொதுமக்கள் பலர் கடைகளை தேடுவதை பார்த்து சைக்கிளில் சென்று தேநீர் வியாபாரம் செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி சைக்கிள் மற்றும் டீ கேத்தலை முதலில் வாடகைக்கு எடுத்து தனது நடமாடும் தேநீர் வியாபாரத்தை துவக்கியுள்ளார். அதில் ஓரளவு வருவாய் கிடைக்கவே, தெரு ஓரங்களில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு இலவசமாக டீ வழங்கியுள்ளார்.

பின்னர் தனது வீட்டிலேயே தனக்கும் சமைக்கும் உணவோடு கூடுதலாக சமைத்து பொட்டலம் மடித்து நாள்தோறும் மூன்று வேலையும் ஆதரவற்றோர் சுமார் 30 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி வருகிறார். இளைஞரின் இந்த சேவையை இப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர். இதுகுறித்து பேசிய தமிழரசன் தனது பழைய வாழ்க்கையை நினைத்து தன்னைப் போல் ஆதரவற்றோருக்கு நாள்தோறும் இலவச உணவு வழங்கி வருவதாகவும், தமிழக அரசு தனக்கு நிரந்தர தொழில் தொடங்க உதவி செய்திடும் பட்சத்தில் மேலும் பலருக்கு உதவி செய்வேன் என்றும் கூறினார். மேலும் தனது லட்சியமே ஆதரவற்றோரை காப்பாற்றுவது தான் என்ற அவர் ‘‘இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம், மற்றவர்களுக்கு உதவி செய்வோம்’’ என கூறி நெகிழச்செய்தார்.

Tags : graduate , Food, Graduate Youth, Thoothukudi, Tamilarasan
× RELATED காதலன் வீட்டில் பட்டதாரி தர்ணா