×

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தியும், தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது. இதுகுறித்து பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மனுவில், இந்துக்களின் கடவுள்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது.

அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நடராஜன் கடந்த 16ம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் குண்டர் போடப்பட்டுள்ளது. மேலும், நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kanda Sashti ,mob ,Surendran ,Black ,crowd , Kanda Sashti Armor, Black Crowd, Surendran, Thugs Act, Chennai Police Commissioner
× RELATED சுல்தான் பத்தேரி ஊர் பெயரை...