கேரளாவில் மணமகன், மணமகள் உள்பட திருமணத்தில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மணமகளின் தந்தை மீது வழக்குப்பதிவு

காசர்கோடு: கேரளாவில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட  43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், செங்கலா பஞ்சாயத்தில் கடந்த 17ம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், திருமணத்தில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்ற விதிமுறை இருந்து வருகிறது. ஆனால், இந்தத் திருமணத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, திருமணத்தில் பங்கேற்றவர்கள் பட்டியல் எடுத்து மருத்துவ அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர்.

இதில் மணமகன், மணமகள், மணமகனின் தந்தை உள்பட்ட 43 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தத் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த மணமகளின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது கேரள தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். இந்த திருமண விழாவில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>