×

அக்னி ஏவுகணையின் தந்தை ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று: மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினர் அஞ்சலி

ராமேஸ்வரம்: அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மாணவர் நலன், கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர். 1931, அக்டோபர் 15ம் தேதி ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் மரைக்காயருக்கும், ஆஷியம்மாளுக்கும் 7வது பிள்ளையாக ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம், ஆரம்பக்கல்வியை ராமேஸ்வரம், வர்த்தகன் தெருவில் சிறிய பள்ளியில் துவக்கினார். ஆரம்பக்கல்வி முடித்த பின் ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் உயர்நிலை கல்வியை முடித்தார். பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் முடித்தார்.

தொடர்ந்து, சென்னை எம்ஐடியில் விமான தொழில்நுட்ப படிப்பை தேர்வு செய்து தனது இளவயது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார். படிப்படியாக கல்வித் தகுதியை வளர்த்துக்கொண்ட கலாம், தொடர்ந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு அக்னி ஏவுகணை சோதனையை வென்றெடுத்தார். இந்திய விண்வெளித்துறையில் மட்டுமல்லாது, விவசாயம் மற்றும் மருத்துவத்துறை வளர்ச்சி குறித்தும் சிந்தித்து செயலாற்றி வந்த கலாம், 11வது ஜனாதிபதியாக கடந்த 2002ம் ஆண்டு பதவி ஏற்றார். இந்நிலையில், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மாணவர்களிடையே உரையாற்றுகையில் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரான, ராமேசுவரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வருபவர்கள் கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவற்றையும் பார்த்து செல்கின்றனர். இன்று அப்துல்கலாமின் 5ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கூட்டமாக கூடுவதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. எனவே கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தலைமையில் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags : ABJ Abdul Kalam ,Agni , ABJ Abdulkalam, Remembrance Day, Family Tribute
× RELATED ஜெயங்கொண்டத்தில் சாலையோர புளிய மரத்தில் திடீர் தீ