இணைய வழிக் கல்வி திரவ உணவு போன்றது: புருஷோத்தமன், எவர்வின் பள்ளிக் குழுமம் தலைவர்

இளமையில் கல், இடைநிற்றல் இல்லாமல் கல் என்பது தான் மிகச் சிறந்த கல்விக்கான தாரக மந்திரம். ஆனால், நம் இளம் சிறார்கள் நான்கு மாதங்களாக முழுமையான வகுப்பறை கல்வி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதேநிலை தொடர்ந்தால், கல்வி வளர்ச்சியில் நாடு பின்னடைவை சந்திப்பது இருக்கட்டும்; எதிர்காலத்தில் மனித இனத்துக்கே அறிவுப் பஞ்சம் ஏற்பட்டு அது கற்பனைக்கும் எட்டாத ஆபத்துகளுக்கு வழி வகுத்து விடக்கூடும். ஆகையினால், பள்ளிகளை திறப்பது குறித்து எல்லா நிலைகளிலும் உடனடியாக ஆலோசனைகளை துவக்கி ஒரு புத்திசாலித்தனமான-துணிச்சலான-பாதுகாப்பான முடிவை எடுத்திட வேண்டும்.

கண்ணையும், மனதையும் மூடிக்கொண்டு வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. மாறாக, பள்ளிகளை எந்த வகுப்புகளுக்கு எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும் பட்சத்தில் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை, மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். மாணவர்களுக்கு இப்போது அளிக்கப்படும் இணையவழிக் கல்வி என்பது திரவ உணவு போன்றது. அதையே நிரந்தரமாக எல்லா வேளைகளிலும் வழங்கிட முடியாது.

திட உணவு போல திடமான கல்விக்கு வகுப்பறைகள் தான் ஒரே தீர்வு. போன் பிரச்னை, கண் பிரச்னை, நெட்வொர்க் பிரச்னை, ஆடியோ பிரச்னை, வீடியோ பிரச்னை, வீட்டுப் பிரச்னை என பல சோதனைகளுக்கு மத்தியில் தான் இணையவழிக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பல வீடுகளில், பெற்றோர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டதால், மாணவர்களின் இணைய வழி கல்வியை கண்காணிப்பதில், வழிநடத்துவதில்  சிரமங்கள் உள்ளன. இது நீண்ட காலத்திற்கு தொடர்வது நல்லதல்ல. நம் நாட்டில் கல்வி என்பது வெறும் அறிவைப் பெருக்கிக்கொள்ள மட்டும் கற்கப்படுவது அல்ல.

இன்று வாட்டத்தில் இருக்கும் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் நாளையாவது பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் தான் குழந்தைகளுக்கு இங்கே கல்வி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, 9 முதல் 12 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பள்ளிகள் திறக்காததால் மிகுந்த மன உளைச்சலிலும், தங்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சத்திலும் நாட்களை கழிப்பதை எங்களைப் போன்ற கல்வியாளர்கள் நேரடியாக கவனித்து வருகிறோம்.

இந்த கொரோனா பெற்றோர்கள், பொதுமக்களை மனரீதியாக அளவுக்கு அதிகமாக பயமுறுத்தலாம். ஆனால், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் போன்றோர் ஒருங்கிணைந்து, அச்சம் கொள்ளாமல், அதேசமயம் அலட்சியம் இல்லாமல், நன்றாக திட்டமிட்டு பாதுகாப்பான வழிகாட்டுதல்களோடு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். இந்த அணுகுமுறையில் தான் நம் அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

செப்டம்பர் முதல் வாரத்தில் 9 முதல் 12 வகுப்பு வரையிலும், செப்டம்பர் இறுதியில் 6 முதல் 8 வகுப்பு வரையிலும் அக்டோபர் மாதம் பிற வகுப்புகளையும் திறக்கலாம். அதேபோல், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது காலை, மாலை என வகுப்புகளை-மாணவர்களை பிரித்து பாதுகாப்பாக வகுப்புகளை நடத்தலாம். மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் வழிகாட்டுதலையும் 45 நாட்களுக்கு முன்பாகவே தெரிவித்தால் தான் அதற்கு ஏற்றார் போல் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் போன்றோர் ஒருங்கிணைந்து, அச்சம் கொள்ளாமல், அதேசமயம் அலட்சியம் இல்லாமல், நன்றாக  திட்டமிட்டு பாதுகாப்பான வழிகாட்டுதல்களோடு பள்ளிகள் திறப்பது குறித்து  முடிவெடுக்க வேண்டும்.

* கொரோனா முடிவுக்கு வந்த பின் கல்லூரி திறக்கலாம்: ஆர்.எம்.கிஷோர், ஆர்.எம்.கே இன்ஜினியரிங் கல்லூரி துணை தலைவர்

கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இப்படியெல்லாம் ஒன்று நடக்கும் என்று நாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம். பரவல் அதிகமாகி விடக்கூடாது, பரவலை கட்டுப்படுத்த, கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் மூடபட்டது. அரசும் 10 நாட்கள் தான் கல்லூரியை மூட உத்தரவிட்டது. ஆனால் நாட்கள் கடந்து விட்டது. கல்லூரிகள் மூடப்பட்ட போது மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் கொரோனாவால் நின்று போனது, இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது, கல்விக்கு பாதிப்பு வரக்கூடாது, என்பதால், மாதிரி தேர்வுகளை ஆன்லைனில் நடத்தப்பட்டது. பேராசிரியர்களும் ஆன்லைனில் வகுப்பு எடுத்து அதற்காக மாணவர்களை தயார் செய்தனர்.

சமீபத்தில் அரசும் முதல் மூன்று ஆண்டு மாணவர்கள் தேர்ச்சியடைந்ததாக கூறி, அடுத்த ஆண்டுக்கு அனுப்புவதாக உத்தரவிட்டுள்ளது. இது ஒரு நல்ல விஷயம் அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒன்று. ஏனென்றால் மாணவர்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில், அதாவது போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் வெளியூர்களில் இருக்கும் மாணவர்களும் பயணம் செய்து வந்து, தேர்வு எழுதுவது என்பது சாத்தியம் கிடையாது. அப்படி ஏதாவது செய்திருந்தாலும் தவறாக தான் முடிந்திருக்கும். அவர்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் அரசு எடுத்த இந்த முடிவு வரவேற்கக்கூடியது.

மேலும் இதனையடுத்து, மாணவர்களின் நலன் கருதி அடுத்த செமஸ்டர் வகுப்புகளும் ஆன்லைனில் எடுக்க தொடங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க கூறியுள்ளனர். அரசுகளின் வழிகட்டுதலின்படி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்லூரிகள் திறப்பது குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் மருந்து கண்டுபிடிக்காமல் கல்லூரிகள் திறப்பது தவறானது. அப்படி செய்வது விபரீதமாகும். முக்கியமாக கூற வேண்டும் என்றால் கொரோனாவுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், சமூக இடைவெளி ஒன்று தான் தற்போது வரை தங்களை கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஒன்றாக கூறப்படுகிறது.

எனவே கல்லூரிகள் திறக்கப்பட்டால், மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பது சாத்தியமற்ற ஒன்று. ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் இருக்கும் போது, சமூக இடைவெளி பின்பற்றினால் 10 பேர் கூட அமர முடியாது.

மாணவர்களையும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் பெற்றோர்களுக்கும், மாணவர்கள் கல்லூரி வந்து சென்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிரமமாகும். கல்லூரிகள் திறப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை, ஆனால் பொது போக்குவரத்து இன்னும் இயக்கப்படவில்லை, வெளியூர் சென்ற மாணவர்கள், திரும்ப வருவதில் சிக்கல் உள்ளது. அப்படி அருகே இருப்பவர்களும் வந்தாலும் தினமும் சொந்த வாகனங்களில் வருவதும் சிக்கல்.

விடுதிகள் திறந்து மாணவர்களை தங்க வைப்பதிலும், பராமரிப்பதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன. மருந்து வரும்வரை காத்திருக்கின்றனர். எனவே கொரோனாவுக்கு மருந்து வந்து விடும் என்று கூறியுள்ளனர். மருந்து வந்து எதாவது தீர்வு வந்த பிறகு தான் கல்லூரி திறக்கும் நிலையில் உள்ளோம். அப்படி திறந்தால் தான் மாணவர்களுக்கும், எல்லோருக்கும் நல்லது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  அதிகளவில் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதால் மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்புமில்லை. கொரோனாவுக்கு எந்த மருந்தும்  கண்டுபிடிக்காத நிலையில், சமூக இடைவெளி ஒன்று தான் ஒரே வழி. மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளியை  கடைபிடிக்க வைப்பது சாத்தியமற்ற ஒன்று.

Related Stories:

>