தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை: கைதாக வாய்ப்பு இருப்பதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று மீண்டும் விசாரணை நடக்கிறது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் கடந்த மாதம் சிக்கியது. இது தொடர்பாக தங்கராணி சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல்களுடன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரித்தனர்.

அதற்கு முன்பு சுங்க இலாகா அதிகாரிகளும், சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரித்தனர். இந்த 2 விசாரணையின் போதும் சிவசங்கர் கூறிய பதில்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று கொச்சியில் என்ஐஏ விசாரணைக்காக சிவசங்கர் மீண்டும் ஆஜராக உள்ளார். சிவசங்கரிடம் விசாரணை நடத்த டெல்லி, ஐதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் கொச்சி வந்துள்ளனர். முதலில் சுங்க இலாகா, என்ஐஏவிடம் அளித்த பதில்களில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து சிவசங்கரிடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல் சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட அனைவரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் மிக நீண்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை தயாரித்து உள்ளனர். விசாரணை முடிவில் அவர் சுங்க இலாகா பதிவு செய்த வழக்கில் குற்றவாளி ஆவாரா? அல்லது என்ஐஏ பதிவு செய்துள்ள வழக்கில் குற்றவாளி ஆவாரா? என்பது தெரியவரும். தங்கம் கடத்தலுக்கு சிவசங்கர் சில வசதிகளை செய்து கொடுத்தார் என்பதற்கான முக்கிய ஆதாரங்கள் என்ஐஏ, சுங்க இலாகாவுக்கு கிடைத்துள்ளன. சிவசங்கர் ஏற்பாடு செய்து கொடுத்த பிளாட்டில்தான் தங்க பரிமாற்றம் நடந்துள்ளது.

இன்றைய விசாரணைக்கு பிறகு சிவசங்கர் கைதானால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தங்கம் கடத்தலுக்கும், தீவிரவாத செயல்பாடுகளுக்கும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தெரிந்தே உதவி செய்திருப்பார் என்று என்ஐஏ கருதவில்லை. இருப்பினும், எதற்காக உதவி செய்தார்? என்ற விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ள என்ஐஏ விரும்புகிறது.

* துணை தூதருடன் சொப்னா 20 முறை போனில் பேச்சு

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கடந்த ஜூன் 30ம் தேதி தங்கம் அடங்கிய பார்சல் வந்தது. அன்றுமுதல் சொப்னா தலைமறைவான ஜூலை 5ம் தேதி வரை உள்ள நாட்களில் சொப்னாவும், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதர் (  பொறுப்பு) ராஷித் அல்சலாமியும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளனர். பார்சல் வந்த ஜூன் 30ம் தேதி அன்றும், அதற்கு முன்புள்ள நாட்களிலும் தினமும் 9 முறைக்கு மேல் பேசியுள்ளனர். ஜூலை 3ம் தேதி 20 முறை பேசியுள்ளனர். அன்றுதான் பார்சலில் தங்கம் இருப்பதை சுங்க இலாகாவினர் உறுதி செய்தனர். தான் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே அல்சலாமி தப்பி சென்றுள்ளார் என என்ஐஏ கருதுகிறது.

Related Stories:

>