×

கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணி (30). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் குசேலன் என்பவர் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். மேலும், அருகருகில், கோபி என்பவர் பஞ்சர் கடையும், குத்தானம்மேடு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் டீக்கடையும் வைத்துள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றனர்.

இந்நிலையில், நேற்று முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட கொள்ளையர்கள், ஆட்டோ மொபைல்ஸ் கடையின் பூட்டை உடைத்து கள்ளாவில் இருந்த ரூ.5000 ரொக்கம், காப்பர் வயர், ஆயில் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும், இந்த கடையின் அருகில் உள்ள கடைகளின் பூட்டையும் உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, தகவலின் பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, வெல்டிங் கடை, பஞ்சர் கடை, டீக்கடை, வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம் என அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் காப்பர், மின்சார வயர், ஆயில் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க பஞ்சர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கில் கடைகள் திறக்கப்படாது என்பதால் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து, சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : persons ,shops ,Robbery ,row ,Gummidipoondi , Gummidipoondi, 4 shop, robbery, mysterious persons, handcuffs
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...