×

பருவநிலை மாற்றத்தால் நாய், பூனைகளை தாக்கும் `பார்வோ’ வைரஸ்

திருவள்ளூர்: பருவநிலை மாற்றம் காரணமாக மனிதர்களுக்கே காய்ச்சல், தலைவலி, சளிப்பிடித்தல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்போது, விலங்குகள் மட்டும் என்ன விதிவிலக்கா? அவற்றுக்கும் பருவநிலை மாற்றம், காலநிலை போன்றவற்றால் சில நோய் தாக்குதல்கள் ஏற்படும். தற்போது வளர்ப்பு நாய்களை `பார்வோ’ என்ற வைரஸ் தாக்குகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் நாய்களின் வெள்ளையணுக்கள் குறைந்துவிடும். இதனால் அவைகள் நோய்தொற்றுக்கு விரைவில் ஆளாகும். இதனால் இறப்பை கூட சந்திக்கும் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

இந்த வைரஸ் தாக்கப்பட்டால், தொடர்ந்து வாந்தி எடுத்தல், ரத்தம் கலந்த டையேரியா, உடல் சோர்வு, உணவு உண்ணாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அப்படியிருந்தால் உடனே அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரிடம் நாயைக் கொண்டு செல்ல வேண்டும். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், `பார்வோ’ வைரஸ் என்பது நாய்களுக்கு வரும் பொதுவான வைரஸ் தாக்குதல் நோய். 1978ம் வருடம் முதன் முதலாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற வைரஸ்கள் போல் அல்லாமல் வெளி இடங்களிலும் இந்த வைரஸ் வாழும். நாய்கள், பூனைகள் மட்டுமே இதன் பிரதான இலக்கு. காற்றில் பரவும் தன்மை கொண்டது. நாட்டு நாய்கள் உட்பட அனைத்து வகையான நாய்களையும் தாக்கும் திறன் கொண்டது. நாய், பூனைகளிடமிருந்து ஆடு, மாடு மற்றும் மனிதர்களை இந்த வைரஸ் தாக்குவதில்லை.

பிறந்த 6வது வாரத்தில் `சிக்ஸ் இன் ஒன்’ என்ற தடுப்பூசி போடுவது அவசியம். ஒரு வயதிற்கும் குறைவான நாய்களை மட்டுமே 90 சதவீதம் இந்த வைரஸ் தாக்கும். எனவே, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருந்தால், உடனே அருகில் இருக்கும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் முறையான சிகிச்சை அளிக்கப்படும். பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக ஏற்படும் `பார்வோ’ வைரஸ் தாக்குதல் குறித்து செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என்றார். 


Tags : Climate change, the dog, the cat, the attacking `parvo 'virus
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...