×

வரதராஜபுரம் ராயப்பா நகரில் தரமில்லாமல் அமைக்கப்படும் தார் சாலை: பொதுமக்கள் புகார்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ராயப்பா நகரில்  அமைக்கப்படும் தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்படுவதாக  இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி ராயப்பா நகரில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. தற்போது கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் 2016ம் ஆண்டு வீசிய வர்தா புயல் மழையினால் ராயப்பா நகரில் சாலைகள் அடித்து செல்லபட்டன. இதனால் இப்பகுதி மக்கள், சேதமாகி உள்ள சாலைகள் சீரமைக்க வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியிடம் சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர். இதனைய தொடர்ந்து ரூ. 33 லட்சம் மதிப்பில் ராயப்பா நகர் பிரதான சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. தற்போது சாலை சீரமைக்க டெண்டர் எடுத்த நிறுவனம் லாப நோக்கை கணக்கில் கொண்டு தரமில்லாமல் சாலை அமைத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராயப்பா நகரில் பல்வேறு போரட்டங்களுக்கு பிறகு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சாலை சீரமைக்க டெண்டர் எடுத்தவர்கள் லாப நோக்கை கணக்கில் கொண்டு தரமில்லாமல் சாலை அமைத்து வருகின்றனர். மேலும் 50 அடி அகலம் கொண்ட பிரதான சாலை தற்போது 14 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் சாலை சீரமைத்த பிறகு தான், சாலை சேதமாகாமல் இருக்க சாலையின் இருபுறமும் தரமான மண் கொட்டி சமன் செய்ய வேண்டும். ஆனால் ஜல்லி கற்கள் கொட்டி சமன் செய்யபட்டுள்ள நிலையில், சாலை ஓரத்தில் இருக்கும் மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து சாலையின் இருபுறமும் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், கான்ட்ராக்டருக்கு சாதகமாக நடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : town ,road ,Varadarajapuram Rayappa , Varadharajapuram, Rayappa Nagar, substandard, tar road, public complaint
× RELATED பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு...