×

கார்ப்பரேட்டுகளுக்கு கார்பெட் விரிக்கும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கார்ப்பரேட்டுகளுக்கு கார்ப்பெட் விரிக்கும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, புதிய “சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020யை மத்திய அரசு வெளியிட்டிருப்பதற்கு திமுக சார்பில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டம் துவங்கும் முன்பே பெற வேண்டிய சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி தேவையில்லை என்று புதிய அறிவிக்கை மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  ‘கார்ப்பெட்’ விரித்துள்ளது. பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் கூட மத்திய பா.ஜ. அரசின் கவனம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதிலும் அவர்களுக்கு செவ்வனே கடமையாற்றுவதிலுமே இருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது. மத்திய-மாநில உறவுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும்-சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் மாநிலங்களைப் புறக்கணிக்கும் விதத்திலும் இந்த புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்களும், விவசாயிகளும் போராடி வரும் நிலையில்-காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்று தமிழகமே ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அ.தி.மு.க. அரசின் ஒத்திசைவுடன் மத்திய அரசு ஒவ்வொரு திட்டமாக அனுமதித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி”  அவற்றை எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்திருப்பது, “மெஜாரிட்டி” இருக்கிறது என்பதற்காக அதைத் துஷ்பிரயோகம் செய்யும் முறையில் மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ள மக்கள் விரோத சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையாகவே இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் போதும் அதுவும் வரம்புகளை எல்லைகளை மீறி நாம் சலுகை காட்டினாலும் யார் கேட்க முடியும்? என்ற “சர்வாதிகார” மனப்பான்மையுடன் தங்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையை பாஜக தலைமையிலான மத்திய அரசு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது; வாக்களித்த பெருமக்கள் இந்த அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020ஐ ஏற்கனவே உள்ள 2006, அறிவிக்கையை விடக் கடுமையாக்கி நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளையில் இந்த அறிவிக்கையைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு மாவட்ட வாரியாக கருத்துக் கேட்க வேண்டும்.

அந்த ஜனநாயக நடைமுறை இயலாது என்று பாஜக அரசு கருதுமேயானால் கொரோனா காலத்தில் இந்த அறிவிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்கும் முடிவினை உடனடியாகக் கைவிட்டு அறிவிக்கையைத் திரும்பப் பெற்று நாடாளுமன்றம் கூடியவுடன் இரு அவைகளிலும் முழு விவாதம் நடத்தி சாதக பாதக அம்சங்களை நன்கு ஆராய்ந்து சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய பாஜ அரசு முன்வர வேண்டும்.

Tags : corporates ,MK Stalin ,government , Corporate, Corporate, Environment, Attack Draft Notice, Federal Government, MK Stalin, Insistence
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...