×

தனியார் மருத்துவ கல்லூரி அருகே மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது: ரூ.15 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்

பூந்தமல்லி: போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகில், மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அம்பத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகம் நேற்று அந்த வழியாக ரோந்து சென்றபோது, கல்லூரி மதில்சுவர் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேர், போலீசை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில் அய்யப்பன்தாங்கல் அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி வசந்தபுரத்தை சேர்ந்த ரவி (67), சரத்குமார் (27) என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், விடுதியில் தங்கியிருப்பவர்களை குறிவைத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 பைக்குகள், 3 செல்போன்கள், ரூ.35 ஆயிரம் மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களின் முகவரியை போலீசார் விசாரித்தபோது, வளசரவாக்கத்தில் உள்ள ஒரு முகவரியை தெரிவித்துள்ளனர். அங்கு, போலீசார் நேரில் சென்றபோது, அது போலியான முகவரி என தெரிந்தது. பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது, உண்மையான முகவரியை தெரிவித்தள்ளனர். அந்த முகவரியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று சோதனை செய்தபோது, அங்கு 30 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம். கைது செய்யப்பட்டவர்களுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Private Medical College, Student, 2 arrested for selling cannabis, Rs 15 lakh, cannabis confiscated
× RELATED 35 கிலோ கஞ்சா பறிமுதல்