×

அண்ணாநகர் காவல் சரகத்தில் வீடியோ கால் மூலம் புகாரளிக்கும் வசதி

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதி மக்கள் வீடியோ காலில் புகார் அளிக்கலாம் என காவல் துறை துணை ஆணையர் அறிவித்துள்ளார். சென்னை நகரில் சமீப காலமாக  பொதுமக்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்தால், கொரோனா பணியை காரணம் காட்டி பொதுமக்களை போலீசார் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அண்ணாநகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கோயம்பேடு, வில்லிவாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லை பகுதிகளில் சமீப காலமாக ரோந்து பணி குறைந்ததால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அண்ணாநகர் துணை ஆணையர் ஜவஹருக்கு தெரியவந்ததும், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் அளிக்கும் புகார்களை வாங்கி, உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வருவதை தவிர்க்கும் வகையில், அண்ணாநகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், இன்று முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 முதல் 1 மணி வரை ‘6369 100 100’ என்ற வாட்ஸ்அப் எண்ணில், தன்னிடம் வீடியோ கால் மூலம் தங்களது குறைகளையும், குற்றச்சம்பவங்கள் குறித்து புகார்களையும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Police Station ,Anna Nagar , Anna Nagar, Police Station, Video Call, Reporting Facility
× RELATED காவல்துறையில் மனிதநேயம் பசியால்...