×

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார். சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிக்கான பணிநியமன ஆணையை நாளை வழங்க உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், ஊரடங்கு தடையை மீறி கடையை நடத்தக்கூடாது என்றும், எனவே, கடையை அடைக்கும்படி கூறி உள்ளனர். மேலும், அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதன்பேரில் அவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரையும் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார்.  மறுநாள் அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தார்.  சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பத்தப்பட்ட காவலர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார். சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிக்கான பணிநியமன ஆணையை நாளை வழங்க உள்ளார்.


Tags : Palanisamy ,Jayaraj ,Phoenix , Jayaraj, Phoenix, Government Service, Appointment Order, Chief Palanisamy
× RELATED மனைவியுடன் தகாத உறவு வாலிபருக்கு கத்திவெட்டு