×

பரிசோதனை முடிவு வரும் முன் உயிரிழக்கும் அபாயம்; தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் `கொரோனா’ பரவல்: கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறல்

நெல்லை: தென் மாவட்டங்களில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கில் உயரும் புதிய நோயாளிகளால் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறுகிறது. கொரோனா வைரஸ் நோய் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவி வருகிறது. மே மாதத்திற்கு பின்னர் தொற்று பரவல் வேகம் எடுத்த நிலையில் தற்போது நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஒரு நாள் கூட பரவல் இல்லாத நிலை உருவாகியுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்த கொரோனா பாதித்தோர் 10 ஆயிரம் என்ற பெரிய எண்ணிக்கையை தொட்டுள்ளது.

24ம் தேதி நிலவரப்படி 9 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது. 3 மாவட்டங்களையும் சேர்த்து தினமும் 500 முதல் 600 பேர் என நாள் தவறாமல் நோயாளிகள் பட்டியலில் புதிதாக சேர்கின்றனர். இதன் காரணமாக ஏற்கனவே இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்கள் நிரம்பி வழிகின்றன. வாரத்திற்கு இரண்டு புதிய மருத்துவ மையங்களை திறக்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர பணியாளர்களை ஒதுக்கீடு செய்யவும் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்டவைகளை வழங்கும் நடவடிக்கைகளால் பொதுசுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் திணறுகிறது.

இதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அச்சுறுத்தும் வகையில் உயர்கிறது. 3 மாவட்டங்களில் தினமும் சராசரியாக 10க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா அல்லது கொரோனா அறிகுறி உள்ளவர்கள் இறக்கின்றனர். உயிரிழப்பவர்களில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அல்லது வீடுகளில் இருக்கும் நிலையில் பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் முடிவு வருவதற்கு முன்னதாகவே உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. ஒரு சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 24 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கூறுகையில், ‘அதிக வயதானவர்கள் மற்றும் பிற நோய் பாதிப்பு உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும்போது அபாய கட்டத்தை திடீரென எட்டுகின்றனர். அவர்களில் பலர் சிகிச்சையில் நல்ல நிலையில் இருக்கும்போது திடீர் என மூச்சுத் திணறல் அல்லது ஹார்ட்அட்டாக் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். கொரோனா பாதித்து அதிலிருந்து மீண்டு உடல் ஆரோக்கிய நிலையை எட்டினாலும் கவனமாக இருக்கவேண்டும். கொரோனாவால் பாதித்த இளம் வயதினர் தம்மை எதுவும் செய்யாது என அலட்சியமாக இருக்கக் கூடாது.

அவர்கள் அதிலிருந்து மீண்டாலும் அவர்கள் மூலம் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கோ, வெளியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கோ பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் அரசு காட்டிய வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்’ என்றனர்.

Tags : death ,end ,districts ,Corona ,Corona Distribution ,Southern District , Southern District, Corona Distribution, Health, Stuttering
× RELATED காய்ந்த புற்களை தீயில் எாிப்பு-சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு