×

மகாராஷ்டிராவில் பயங்கரம்... அரியானாவில் பதுங்கல்; மருமகளை கொன்று பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்த 4 பேர் கைது: 18 மாதங்களுக்குப்பின் சிக்கினர்

பால்கர்: குடும்ப பிரச்னையில், மகாராஷ்டிராவில் மருமகளை கொன்று பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்த குடும்பத்தினர் 4 பேர் 18 மாதங்களுக்கு பின் சிக்கினர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் போய்சார் என்ற இடத்தில் உள்ள வாடகை குடியிருப்பு வீட்டின் உரிமையாளர், பல மாதமாக பூட்டியிருந்த வீட்டை மற்றொருவருக்கு வாடகைக்கு விடுவதற்காக கடந்த 19ம் தேதி திறந்து பார்த்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் பெண் சடலம் அழுகிய நிலையில் எலும்பு கூடாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போய்சார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் எலும்பு கூடுடன் உள்ள சடலத்தை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் குடியிருந்த 20 வயதான புல்பூல் ஜா என்ற இளம்பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. மேலும், புல்பூல் ஜாவின் கணவரும், மாமியாரும் அவரைக் கொன்றுவிட்டு அரியானாவுக்கு தப்பிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட புல்பூல் ஜாவின் கணவர் தீபக் ஜா, அவரது தந்தை பவன் ஜா, தாய் பச்சி தேவி மற்றும் சகோதரி நித்து சிங் ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாட்டீல் கூறுகையில், ‘புல்பூல் ஜாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

இதுகுறித்து ​​புல்பூல் ஜா 2018ம் ஆண்டின் இறுதியில் கொடுத்த புகாரில், தனது மாமியார் தன்னை துன்புறுத்துவதாகவும், சித்திரவதை  செய்வதாகவும் குற்றம் சாட்டினார். பின்னர் வழக்கை வாபஸ்  பெறுமாறு புல்பூல் ஜாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டதால், வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் புல்பூல் ஜாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்க, வாடகை வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் புல்பூல் ஜாவின் உடலை திணித்து அடைத்து வைத்துள்ளனர்.

பின்னர், தங்களது சொந்த மாநிலமான அரியானாவுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றுவிட்டனர். ஆனால், வீட்டின் உரிமையாளருக்கு அவர்கள் தொடர்ந்து பல மாதங்களாக வாடகை செலுத்தி வந்தனர். அதாவது, தாங்கள் செய்த கொலையை மறைக்க கிட்டத்தட்ட ரூ.52,000 வாடகை செலுத்தி உள்ளனர். கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின், வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் வீட்டின் உரிமையாளர், வாடகை பணத்தை கேட்டுள்ளார். அவர்கள் வாடகை பணம் தர மறுத்ததால், வேறு ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தார். அதனால், வீட்டை திறந்து பார்த்த போது, பிளாஸ்டிக் டிரம்மில் புல்பூல் ஜாவின் சடலத்தை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

கடந்த 2019 பிப்ரவரியில் புல்பூல் ஜா கொல்லப்பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பின், புல்பூல் ஜா கொலை செய்யப்பட்டது தற்போது அம்பலமாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட புல்பூல் ஜாவின் கணவர் தீபக் ஜா, அவரது தந்தை பவன் ஜா, தாய் பச்சி தேவி மற்றும் சகோதரி நித்து சிங் ஆகியோரை அரியானாவில் இருந்து போய்சருக்கு அழைத்து வந்தோம். விசாரணையில், ​​மருமகள் புல்பூல் ஜாவை கொன்றதை 4 பேரும் ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்றார்.

Tags : daughter-in-law ,ambush ,Maharashtra ,Haryana , Maharashtra, plastic drum, arrested
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...