×

பொதுமக்கள் பங்கேற்பின்றி தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

தூத்துக்குடி: லட்சக்கணக்கானோர் வழக்கமாக பங்கேற்கும் தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று பொதுமக்கள் பங்கேற்பின்றி இன்று காலை நடந்தது. இந்த ஆண்டு தூய பனிமயஅன்னையின் 438-ம் ஆண்டுபெருவிழாவானது இன்று ஜூலை 26 (ஞாயிறு) துவங்கி வரும் ஆகஸ்ட் 5ம் தேதி (புதன்) வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று ஜூலை 26ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 5ம் தேதி பெருவிழா அன்று தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன், பாளைங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, பாளையங்கோட்டையின் பணிநிறைவு பெற்ற ஆயர் ஜுடு பால்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக, இந்த ஆண்டு கொடி பவனி, திருவிருந்துவிழா, நற்கருணை பவனி, சப்பர பவனி நடைபெறாது என்றும், பெருவிழாவின் இதர வழிபாடுகள் பேராலயத்தின் உள்ளே மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும், மேலும் அவை அனைத்தும் தொலைக்காட்சியிலும், யுடியூப்பிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பனிமயமாதா ஆலய கொடியேற்ற நிகழ்ச்சி டி.வி.க்களிலும், யு டியூப்பிலும் ஒளிபரப்பட்டது. மேலும் கொடியேற்ற விழாவையொட்டி ஆலயத்தில் இன்று காலை 5.30 மணி, 6.30 மணி, 7.30 மணி, 8.30 மணி, 9.30 மணிக்கு திருப்பலிகள் நடந்தன. மதியம் 3 மணிக்கு மறையுரையும் நடந்தது. இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவுக்கு பொதுமக்களை அனுமதிக்காததால் மாதாவின் பக்தர்கள் இந்த ஆண்டு இல்லங்களிலிருந்தே பனிமய அன்னையிடம் மன்றாடி, இறையாசி பெற்றனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா செய்துள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி செல்வன், டவுன் டிஎஸ்பி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி பனிமயமாதா  திருவிழாவில் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும்  லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக  சம்பிரதாயத்திற்கு கூட உள்ளூர் இறைமக்கள் கலந்து கொள்ளாதது, கிறிஸ்தவர்கள்  மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியது.Tags : Thoothukudi Panimayamatha Temple Festival ,public , Public, Thoothukudi Panimayamatha Temple Festival started with flag hoisting
× RELATED காணொலியில் கொரோனா சிகிச்சை மாநாடு:...