×

சேதுபாவாசத்திரம் கடைமடையில் முறை வைத்து தண்ணீர் வழங்குவதால் இந்தாண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா?... விதைநெல்லை கையில் எடுக்காத விவசாயிகள்

சேதுபாவாசத்திரம்: முறைவைத்து தண்ணீர் வழங்குவதால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இந்தாண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. விதைநெல்லை கூட கையிலெடுக்காமல் கடைமடை விவசாயிகள் உள்ளனர். மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ம் தேதியும். கல்லணை ஜூன் 16ம் தேதியும் டெல்டா பாசன சாகுபடிக்காக திறக்கப்பட்டு 43 நாட்களுக்கு மேலாகிறது. இதைதொடர்ந்து சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் தண்ணீர் முறை வைத்து வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

ஆனால் இதுவரை ஒருமுறை கூட 5 நாட்கள் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. 2 நாட்கள், 3 நாட்கள் என பெயரளவில் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கவில்லை. முறை வைக்காமல் 30 நாட்கள் தண்ணீர் வழங்கினால் ஏரி, குளங்களை நிரப்பி விடலாம். அதேநேரம் நாற்று விடும் பணியும் நிறைவடைந்து விடும், நல்ல மகசூல் கிடைக்கும், ஆடிப்பட்டமும் கை கூடிவிடும் என்று கடைமடை விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் இதுவரை எந்தவொரு ஏரியும் நிரம்பவில்லை.

கடைமடை விவசாயிகள் விதை நெல்லை இதுவரை கையில் எடுக்கவில்லை. விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாக ஆடு, மாடுகள் மேய்ந்து வருகிறது. ஆடி 10 தேதியை தாண்டிய நிலையில் மேட்டூர் அணை வெகுவாக குறைந்து வரும் நிலையில் இந்தாண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா என்று கடைமடை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags : shop ,Sethupavasathiram , Sethupavasathiram Shop, Samba Cultivation, Farmers
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி