×

2ம் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு: 7 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம்

ஊட்டி: இரண்டாவது  சீசனுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 140 வகையான 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது 2ம் சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 7 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்யவும், 140 வகையான 2.5 லட்சம் புதிய மலர் செடிகள் நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இத்தாலியன் பூங்கா, புதிய பூங்கா, நுழைவு வாயில் ஆகிய பகுதிகளிலும் மற்றும் 7 ஆயிரம் தொட்டிகளில் நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தற்போது நாற்று நடவு பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து  தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் (தாவரவியல் பூங்கா) ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு உள்ளதால் பூங்காவை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவது கடினம். இம்முறை 2வது சீசனுக்காக பூங்கா முழுவதிலும் 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படவுள்ளது. மேலும், 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு அலங்கார மாடத்தில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறை பிரெஞ்ச்  மற்றும் இன்கா மேரிகோல்டு, சால்வியா, டையாந்திஸ், பெட்டூனியா, பிகோனியா, டேலியா, கேலண்டுல்லா, செல்லோசியா, பிளக்ஸ் உட்பட 140 வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்த செடிகளில் வரும் செப்டம்பர் மாதம்  முதல் வாரத்தில் மலர்கள் பூத்துவிடும். முதல் சீசனின்போது போதிய மழை  கிடைக்கவில்லை. ஆனால், தற்போது அடிக்கடி சாரல் மழை பெய்து வரும் நிலையில்,  அனைத்து செடிகளும் செழித்து வளர்ந்து அதிகளவு பூக்கள் பூத்து  குலுங்கும் என எதிர்பாக்கப்படுகிறது’’ என்றார்.


Tags : flowering plants ,season ,Botanical Garden , Botanical Garden, Flowering Plants, Planting
× RELATED கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்பாட்டு பணி தீவிரம்