×

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு; பயணிகள் ரயில் இயங்காததால் ரயில்வேக்கு 50 சதவீதம் நஷ்டம்: 3 மாதத்தில் ரூ25 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய்

சேலம்: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் இயங்காததால், ரயில்வேத்துறைக்கு 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 3 மாத காலத்தில் பாதி அளவாக ரூ25 ஆயிரம் கோடி மட்டும் வருவாய் ஈட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பயணிகள் ரயில் இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்தது. அதேவேளையில் மக்களின் உணவு தேவை மற்றும் மருத்துவ பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சரக்கு ரயில்கள் இயக்கத்தை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதிலும், குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே பார்சல் ரயில்களை இயக்கி வருவாய் ஈட்டுகிறது. அத்துடன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை கடந்த மே, ஜூன் மாதங்களில் இயக்கியது. மேலும், ஜூன் மாதம் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே மட்டும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த வகையில், நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயங்குகின்றன. மற்றபடி இதர பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ், விரைவு, துரந்தோ உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

சரக்கு ரயில்களின் இயக்கத்தின் மூலம் பாதியளவு வருவாய் மட்டுமே கிடைக்கிறது. பயணிகள் ரயில் இயங்காததால், 50 சதவீதம் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஜூலை 10ம் தேதி வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக ரயில்வே துறைக்கு ரூ50,899.69 கோடி வருவாய் கிடைத்திருந்தது. அதுவே நடப்பாண்டு அதேக்காலக்கட்டத்தில், ரூ25,145.78 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 50 சதவீத வருவாய் இழப்பாகும். மண்டலம் வாரியாக ஊரடங்கு கால வருவாயை கணக்கிட்டால், பெரும்பாலான மண்டலங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே நிர்வாகம், கடந்த ஆண்டின் இக்காலக்கட்டத்தில் ₹2,504.98 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. நடப்பாண்டில் ₹490 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது. இது 80 சதவீத நஷ்டமாகும்.
இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொது ஊரடங்கின் காரணமாக பயணிகள் ரயில் இயக்கம் மேற்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள், விதை, உரம் உள்ளிட்ட விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், கட்டுமான பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டுச் சேர்த்து வருகிறோம்.

பயணிகள் ரயில் இயங்காதது, ரயில்வேக்கு பெரும் நஷ்டம் தான். அதேவேளையில், மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இந்த நஷ்டத்தை ரயில்வே நிர்வாகம் ஈடுகட்டிக் கொள்ளும். விரைவில், ஊரடங்கு முடிந்து ரயில்கள் இயக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்,’’  என்றனர்.


Tags : country ,railways ,Corona , Corona curfew, passenger train, loss
× RELATED யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்