×

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு...: தமிழக அரசு எதிர்க்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை: சுற்றுச்சூழல் மதிப்பீட்டு சட்டத்தை திருத்தம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மக்கள் கருத்தை அறியாமல் தொழில்கள் தொடங்க வகை செய்யும் வரைவு சட்டத்திருத்தத்திற்கு அனைவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பு பின்வருமாறு...

இயற்கை வளத்தை சுரண்டும் நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஆலைகள், விவசாயிகள் எதிர்க்கும் மீத்தேன் போன்றவற்றிற்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன. ஆனால், போராட்டமா நடத்துகிறீர்கள்?..இனி அதற்கும் வாய்ப்பில்லை என்று கூறுவதை போல் இ.ஐ.ஏ எனப்படும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. புதிய வரைவின்படி குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டு தொழில் திட்டங்களுக்கு பொது கருத்து கேட்பு தேவையில்லை. இதனால், நீர்ப்பாசனம், தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற திட்டங்கள் ஒரு பகுதியில் செயல்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியாது.

பிற திட்டங்களுக்கான கருத்து கேட்பு அவகாசமும் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைக்கப்படுகிறது. மேலும், எந்தவொரு அமைப்போ, சமூக ஆர்வலரோ குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக புகார் கூறும் வாய்ப்பும் பறிபோகிறது. இதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு 2 முறை நிலவர அறிக்கைகளை அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என்ற நிலையும் உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தை தொடங்கலாம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்க செய்யலாம். இது ஒட்டுமொத்த நாட்டுக்கே எதிரானது என்பதால் அனைவரும் இதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.

மேலும், நீர் ஆதாரங்களின் ஊற்றாக விளங்கும் சதுப்பு நில காடுகளில் மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ, சூழலியல் தாக்கம் மதிப்பீடோ செய்ய தேவையில்லை என்றும் புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது. வறண்ட புல்வெளி காடுகள், தரிசு நிலங்களாக கணக்கிடப்பட்டு அப்பகுதி தொழிற்சாலைகளுக்காக திறந்துவிடப்படவும் வழி  செய்யப்பட்டுள்ளது. இப்படி, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020ம் ஆண்டு அமலுக்கு வந்தால் தமிழகத்திற்கு பேராபத்து விளையும் என்பதால் புதிய வரைவுக்கு எதிராக இணைய வழி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Tags : government ,activists ,Opposition ,Tamil Nadu , Ecological Impact Assessment Draft, Opposition, Government of Tamil Nadu, Social Activists, Central Government
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...