×

கொரோனா தொற்று தீவிரமானவர்களை குணப்படுத்த பிளாஸ்மா... தரலாமா?

*  ஒருவரால் பலர் குணமடைய வாய்ப்பு
* விழிப்புணர்வில் களமிறங்குமா அரசு?

மதுரை: கொரோனா தொற்று கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. பல்வேறு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்தி வந்தாலும், பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பு வீரியத்தை குறைக்க பிளாஸ்மா தானம் செய்ய குணமடைந்வர்கள் முன்வர வேண்டுமென கோரிக்கை மருத்துவ வல்லுனர்களிடையே வலுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் வேகம் காட்டி வருகின்றன. நான், நீ என போட்டி தயாரித்தாலும், பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அறிவித்தாலும், இன்னும் தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்த பாடில்லை.

ஓரிரு மாதங்களுக்குள் எப்படியும் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வரலாம். அதுவரை கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் மிகப்பெரும் பங்கை சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகள் வழங்கி வருகின்றன. பிளாஸ்மா சிகிச்சை முறையும் தற்போது வெற்றி பெற்றுள்ளதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா பாதித்தோருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க அனுமதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கிகள் துவக்கப்பட்டுள்ளன. பிளாஸ்மா வங்கிகள் திறந்தாலும், மக்கள் முன்வந்து தானம் அளிப்பதற்கான விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

அதென்ன பிளாஸ்மா...?
ஒரு தொற்று நோய் பாதித்து குணமடைந்தவரின் ரத்தத்தில் நோய் தொற்றை எதிர்க்கும் சக்தி உருவாகி விடும். அவரது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து, அதே நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் செலுத்தி குணப்படுத்துவது தான் பிளாஸ்மா சிகிச்சை. தற்போது தான் பிளாஸ்மா சிகிச்சையின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால், பிளாஸ்மா சிகிச்சை ஒன்றும் கொரோனாவுக்கு பின் வந்த முறை அல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அவ்வளவாக யாரும் கண்டுகொண்டதில்லை. பல தொற்றுநோய்களின் தாக்கத்தின் போது அவ்வப்போது கொடுக்கப்பட்டு வெற்றி பெற்ற முறை தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவ உலகைப் பொறுத்தவரை தொற்றுநோய்களின் சிறந்த தடுப்பானாக பிளாஸ்மா சிகிச்சையை
பார்க்கின்றனர்.

யாரிடமிருந்து எடுக்கலாம்?
ஒரு வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டவரை, தொடர்ந்து இருமுறை பரிசோதனை செய்யவேண்டும். அவரிடம் சம்பந்தப்பட்ட தொற்று நோய் இல்லை என உறுதி செய்யவேண்டும். உறுதி செய்யப்பட்டதில் இருந்து 14வது நாளுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்ய அனுமதிக்கப்படும். இவரிடம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டு ‘ஆபரெசிஸ்’ என்ற முறையில் அதிகபட்சம் 500 மிலி அளவுக்கே பிளாஸ்மா எடுக்கப்படும். எதிரணுக்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக எலிசா சோதனையும் நடத்தப்படும்.

அரை மணிநேரம் மட்டுமே...
ரத்தத்தின் கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் பிளாஸ்மா தனியாக எடுக்கப்படும். பிளாஸ்மா அணுக்களை பிரித்து எடுத்தது போக மீதமுள்ள ரத்தம், எடுக்கப்பட்டவரிடமே மீண்டும் செலுத்தப்படும். 18 முதல் 60 வயதுடையோர் பிளாஸ்மா தானம் செய்யலாம்.  50 கிலோ எடைக்கு குறையாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 9 என்ற அளவில் இருக்க வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் தானம் கொடுக்கலாம். ஒருவர் தானம் செய்ய அதிகபட்சம் அரை மணிநேரம் தான் ஆகும். முதலில் பிளாஸ்மா தானம் செய்த ஒருவர் 28 நாட்களுக்கு பிறகு மீண்டும் வழங்கலாம். ஒருவர் இரு முறை மட்டுமே தானம் செய்ய முடியும்.

யார் தரக்கூடாது?
உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதித்தோர் பிளாஸ்மா தானம் வழங்க முடியாது. தானமாக பெறப்பட்ட பிளாஸ்மாவை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவில் ஓராண்டு வரை பாதுகாப்பில் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்த முடியும்.

யாருக்கு அதிக பலன்?
மிக குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு உள்ளவருக்கு பிளாஸ்மா சிகிச்சை பெரும்பாலும் தேவைப்படாது. அதே நேரம் ஸ்டிராய்டு மற்றும் இதர மருந்துகள் பலனளிக்காமல் சுவாசித்தலில் பாதிப்பு ஏற்பட்டு, ஆக்சிஜன் தேவைப்படும் ஒரு நோயாளிக்கு பிளாஸ்மா நல்ல பலனை தருகிறது. இக்கட்டான இந்த நிலையில் உள்ளவர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம்.

72 மணிநேரத்திற்குள்...
தொற்று பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 2 நாட்களுக்கு தலா 200 மிலி வீதம் செலுத்தப்படும் பிளாஸ்மா, நோயாளியின் உடலில் உள்ள வைரசின் செயல்பாட்டை தடுத்து, படிப்படியாக வைரசின் எண்ணிக்கையை குறைக்கிறது. செயற்கை சுவாசத்தின் தேவையை குறைத்து குணமாக உதவுகிறது. சராசரியாக 48 முதல் 72 மணிநேரத்திற்குள் நல்ல பலனை கொடுக்கிறது. ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா மூலம் 4 பேருக்கு சிகிச்சையளிக்கலாம்.  லேசான அறிகுறிகள், அறிகுறிகளே இல்லாதவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை. நுரையீரல் பாதிப்பு மற்றும் தீவிர சிகிச்சையில் உள்ளோருக்கு நல்ல பயன்தரும். ஆனால், உடல் நிலை மிகவும் மோசமடைந்தோருக்கு தேவைப்படாது.

டெல்லிக்கு அடுத்தபடியாக...
நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி தலைநகர் டெல்லியில் தான் துவக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்களில் துவக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் முக்கிய அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா வங்கிகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரு சில மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. அசாம், மஹாராஷ்டிரா, ஆந்திரா என அடுத்தடுத்து மாநிலங்களும் பிளாஸ்மா தெரபிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. எனவே, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்ட பலர் குணமடையலாம். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையை தொடர்பு கொண்டு பிளாஸ்மா தானம் செய்ய முன்வரலாம்.

தொற்று நோய் பாதித்து குணமடைந்தவரின் ரத்தத்தில் நோய் தொற்றை எதிர்க்கும் சக்தி உருவாகி விடும். அவரது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து, அதே நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் செலுத்தி குணப்படுத்துவது தான் பிளாஸ்மா சிகிச்சை.

அதிரடி காட்டுமா அரசு?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகளில் பாதிப்பு அதிகமாவது ஒருபுறம் என்றால், விருதுநகர் உள்ளிட்ட சிறிய மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது. பாதிப்புக்கு ஏற்றவாறு அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் உள்ளி–்ட்ட வசதிகள் இல்லை. எனவே, அரசு பிளாஸ்மா தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் பட்டியலில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, பிளாஸ்மா சிகிச்சையில் அவசியத்தை வலியுறுத்தி, தானம் செய்யக்கோர வேண்டும். அப்படி தருபவர்களை கவுரவித்து, ஊக்கம் அளித்தால், தமிழகத்தில் பாதிப்பு, பலி எண்ணிக்கை குறையும். அரசு அதிரடியாக களமிறங்கி செய்ய வேண்டிய விஷயம் இது.

அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அசத்தல் அறிவிப்பு
பிளாஸ்மா தானத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் கொடையாளர்களுக்கு பல வித அங்கீகாரங்களை வழங்கியுள்ளன. அதன்படி கர்நாடக அரசு பிளாஸ்மா தானம் அளிப்பவருக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்குகிறது. அசாம் மாநில அரசு  விடுத்துள்ள அறிவிப்பில்,  பிளாஸ்மா கொடையாளருக்கு சான்றிதழும், அரசின் கடிதமும் வழங்கப்படும். இதைக் கொண்டுவந்தால் அரசு வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வின் போது கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப்படும். அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மற்ற மாநிலத்தவர் அசாம் வந்து பிளாஸ்மா தானம் செய்தால் அவரின் விமானச் செலவை அரசே ஏற்கும். அவர் கவுரவிக்கப்படுவர்’’ என தெரிவித்துள்ளது.

மருத்துவ வசதிகள் தேவை
பிளாஸ்மா தானம் பெற்றுக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வக்கீல் அன்புநிதி கூறுகையில், ‘‘3 நண்பர்களான நாங்கள் ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பேசி, பிளாஸ்மா தானம் கொடுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதுவரை சுமார் 25 பேருக்கு மேல் மதுரை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்ய வைத்துள்ளோம். அரசு மருத்துவமனையில் விரைவாக தானம் பெற்று, உடனடியாக அனுப்பி வைக்கும் வகையில் போதுமான வசதிகள் இல்லை. மிகவும் தாமதாகிறது. ஒரே நேரத்தில் 7 பேர் கூட தானம் வழங்க முடியவில்லை. தானம் அளிப்பவரிடம் முறையான பரிசோதனைகள் செய்து உறுதிபடுத்தினால் தான் அவரால் தானம் அளிக்க முடியும். வீண் தாமதத்தை தவிர்த்து தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உறுதியான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வராத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனைக் கொடுக்கிறது. முன்வந்து தானம் செய்வோரை அரசு அங்கீகரித்தால் இன்னும் பலர் விரும்பி தானம் அளிப்பர்’’ என்றார்.

தட்டணுக்கள் தானம் வழி காட்டுது டெங்கு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பொதுவாக, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் குறைவாக இருக்கும். மனித உடலில் சராசரியாக 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தட்டணுக்கள் இருக்க வேண்டும். டெங்குவால் பாதித்தவருக்கு தட்டணுக்கள் 20 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும்போது, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் தட்டணுக்கள் செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையில் பலர் குணமடைந்தனர். இதற்காக பல தட்டணு வங்கிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம்தான் தமிழகத்தில் டெங்கு பலி எண்ணிக்கை குறைந்தது. தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால், அடுத்ததாக டெங்கு பாதிப்பு ஆரம்பித்து விடும். எனவே, நாம் கொரோனாவுக்கான தடுப்பு முறைகளை கையாண்டதுபோல, டெங்குவுக்கான தடுப்பு முறைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

‘அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்’

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, பிளாஸ்மா தானம் செய்த விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முகமது ரபீக்  கூறும்போது, ‘‘ஒருவரது பிளாஸ்மா தானத்தால் பலர் பலனடைகின்றனர். பிளாஸ்மா தானம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. ஒரே நேரத்தில் பலர் தானம் பெற்றிடும் வசதியும் அரசிடம் இல்லை. பிளாஸ்மா தானம் மற்றும் பிளாஸ்மா வங்கிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், கருவிகளும், இயந்திரத்திற்கான வசதியும் அரசுத் தரப்பில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம் தேவையான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். இதற்காக அதிகமாக செலவழிக்க வேண்டியதில்லை’’ என்றார்.

Tags : Corona infection, plasma
× RELATED கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி:...