×

கோவையில் தொற்று 3 ஆயிரத்தை தாண்டியது: கொரோனாவை எப்படி விரட்டலாம்?

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. அதிக அளவில் பரவி மக்களை அச்சப்படுத்தி வரும் இந்த கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

மக்கள் சட்ட உரிமைகள் கழக துணை பொதுச்செயலாளர் எஸ்.செல்வராஜ்: கொேரானாவின் தாக்கத்தை குறைக்காமல் இனியும் தாமதித்தால் மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என நாட்டின்  ஒட்டுமொத்த நிர்வாகங்களும் சீர்குலைந்து அதன் விளைவாக வேலையின்மை, பஞ்சம், பட்டினி என மக்கள் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பல்வேறு சமூகக் குற்றங்களில் ஈடுபடும், ஆட்படும் நிலை ஏற்படும். எனவே அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. அவசர நிலை பிரகடனத்தைபோல் போர்க்கால நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசும் செயல்பட வேண்டும்.

தேசிய அளவில் 30 நாட்களுக்கு முழு  ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். விவசாயத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மட்டுமே செயல்பட வேண்டும். தொழில், வியாபாரம் சார்ந்த மக்களும், பொதுமக்களும் வீட்டிலிருந்து வெளியே வரக்கூடாது. தேவையான உணவு பொருட்களை ஒரு மாதத்திற்கு சேமித்துக்கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு அரசே உணவுப் பொருட்களை வழங்கியபின் முழு ஊரடங்கு அமல்படுத்தவேண்டும். மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு தேவையெனில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொலைபேசி வாயிலாக கேட்டு  பெற வசதி செய்ய வேண்டும்.

ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்கள் 30 நாட்கள் தனிமை முகாம்களில் அடைக்கப்படவேண்டும். 15 நாட்களில் கொரானா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிப்பதுடன் அவர்களை சார்ந்தவர்களை தனிமைப்படுத்தப்படுவதால் 15 நாட்களுக்கு பின்  படிப்படியாக தொற்று குறைந்து 30 நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பதுபோக 90 சதவீத நோய கட்டுக்குள் வந்து விடும். அதன்பின் மீதி தொற்று உள்ளவர்களை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை  அளித்து ேமலும் கொரோனா பரவாமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:கோவை நகர் பகுதிகளில் அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது கிராமப்புற பகுதிகளிலும் அச்சுறுத்த துவங்கியுள்ளது. கிராமப்புறங்களில் நோய் எதிர்பாற்றலை வலுப்படுத்த சித்த மருந்துகளை வீடு வீடாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். இறைச்சி கடைகள், மளிகை கடைகள், உழவர் சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்றவாறு உழவர் சந்தைகளை பள்ளி மைதானங்களுக்கு மாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

அங்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் போன்றவர்களையும், மக்களையும் பாதுகாக்க காய்கறி சந்தைகளை இடநெருக்கடி இல்லாத பகுதிகளில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குருந்தொழில் முனைவோர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக உள்ளூர் தொழிலாளர்களை கொண்டுதான் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கொரோனாவை விரட்ட தொழில்நிறுவனங்களுக்கு வரும் தொழிலாளர்கள் கட்டாயம் கைகளை கழுவ சோப் அல்லது கிருமி நாசினி வழங்கப்படுகிறது. பணிபுரியும் போது மிசின்களுக்கு ஏற்றவாறு சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது.

தொழிலாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவது கட்டாயம். ஆர்டர் கொடுக்க வரும்போதும், பொருட்களை பெறும்போதும் வெளியில் நின்றுதான் அனைத்தும் பெறப்படுகின்றன. தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்லும்போதும்  கட்டாயம் சமூக இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ ஆலோசனை
வி.ஜி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் கூறியதாவது: கொரோனா வைரஸ் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனிடம் வேகமாக பரவுகிறது. இதனை தடுக்க முககவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.  கூட்டமான இடங்களுக்கு செல்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். பிற நோய்களுக்கு மருத்துவமனைக்கு சென்றால்கூட கூட்டமாக செல்லாமல் அட்டெண்டர் ஒருவர் நோயாளியுடன் சென்றால் போதுமானது.
கொரோனா வைரஸ் மூக்கு வழியாக செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால் முக கவசத்தை முழுமையாக மூக்கு மூடும்படி அணிய வேண்டும்.

தினமும் கண்டிப்பாக ஆவி பிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் மூக்கில் இருந்தால்கூட முதல்கட்டமாக அது போய்விடும். வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன் துணிகளை துவைத்து குளிக்க வேண்டும். கோவையில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. எனவே மக்கள் பயமோ, பதற்றமோ அடைய வேண்டாம். கொரோனா வந்தால் இறந்து போவார்கள் என்று இல்லை. பெரும்பாலான மக்கள் உரிய சிகிச்சைகளால் உயிர் பிழைத்து மீண்டு வருகின்றனர். இவ்வாறு டாக்டர் வெங்கடேஷ் கூறினார்.

Tags : Coimbatore , Coimbatore, Corona
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...