பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை: நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுடன் சொந்தம் கொண்டாடும் பூட்டான்..!!

திம்பு: பூட்டான் நாட்டில் உள்ள சக்தேங் வனவிலங்கு பகுதியின் 650 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பை சீனா புதிதாக சொந்தம் கொண்டாடுவதால், அதனை சமாளிக்க பூட்டான் இந்தியாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. தங்கள் எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக கடந்த 1984ம் ஆண்டு முதல் 24 சுற்று பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் நடத்தியுள்ளன. கடைசியாக 2016-ல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது

பூட்டானின் மேற்கு செக்டாரில் 269 சதுர கி.மீ பரந்து விரிந்துள்ள டோக்லாம், சிஞ்சுலுங், டிராமனா மற்றும் ஷாகடோ பகுதிகளை சீனாவுக்கு உரிமையாக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து, அதனை ஏற்றுக்கொள்ளுமாறு பூட்டானுக்கு 20 ஆண்டுகளாக பீஜிங் அழுத்தம் கொடுத்து வருகிறது. சீனாவுடன் நீண்ட கால எல்லைப் பிரச்னை இருந்த போதும், இந்தியா - சீனா ஆகிய இரு அண்டை நாடுகளுடனும் சமமான உறவைப் பேண வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தது பூட்டான். இந்த நிலையில் தங்களின் சக்தேங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டும் பணியில் பூட்டான் இறங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, சக்தேங் சரணாலயத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறி பூடானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சீனாவின் இந்த நிலைப்பாட்டை பூட்டான் மிக கடுமையாக எதிர்த்துள்ளது. சீனா எல்லை தொடர்பாக அளித்து வரும் தொல்லையால் தற்போது இரு நாடுகளுடன் சமமான உறவு என்ற பார்வையை பூடான் மாற்றிக் கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக டில்லியுடன் பூடான் நெருக்கம் காட்டி வருவதாக, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலை பயன்படுத்தி அசாமின் கவுகாத்தியிலிருந்து அருணாச்சலின் தவாங் இடையிலான 450 கி.மீ தூரத்தை கணிசமாக குறைக்கும் சாலையை பூட்டான் சரணாலயம் வழியாக அமைக்கும் திட்டத்தை இந்தியா முன் மொழிந்துள்ளது. இதனை பூட்டான் ஏற்றுக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: