×

தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர், 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் முடிவு..!!

சென்னை: தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர், 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.  

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 8,888 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற 20 ஆயிரம் தேர்ச்சி பெற்றவர்களில், இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது.

மேலும் அதற்குப் பின்னரும், தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் 2020-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்ட தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும், அரசின் நிதி நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, தற்போது 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு தொடர்பாக 50 காவலர்களிடம் ஜூலை 31-க்குள் கருத்து பெற்று தெரிவிக்க மாவட்ட கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Assistant Inspector of Police ,police officer examinations ,Tamil Nadu Uniformed Personnel Selection Board , Police Service Selection, Online, Tamil Nadu Uniformed Personnel Selection Board, Results
× RELATED தி.மலை செங்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி!