×

லட்சக்கணக்கான ராம பக்தர்கள் வருவதை தடுக்க முடியுமா?..ராமர் கோயில் பூமி பூஜையை காணொலியில் நடத்துங்கள்...! உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

மும்பை: ராமர் கோயில் பூமி பூஜைக்கு என்னாலும் செல்ல முடியும். ஆனால், இந்தச் சிறப்பான நாளைக் காண ஆவலோடு இருக்கும் லட்சக்கணக்கான ராம பக்தர்கள் வருவதை உங்களால் தடுக்க முடியுமா. ராமர் கோயில் பூமி பூஜையை காணொலியில் நடத்துங்கள் என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாலும், கொரோனா வைரஸ் பரவல் சூழல் இருப்பதாலும் மிகக் குறைவாகவே விஐபிக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அந்தக் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே நேர்காணல் அளித்துள்ளார். அதில் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடத்தப்பட வேண்டும். இது மகிழ்ச்சிக்கான, ஆர்ப்பரிப்புக்கான நாள்.

ஆனால் இந்தப் பெருமைமிகு பூமி பூஜையை அனைவரும் காணும் வகையில் காணொலி மூலம் நடத்த வேண்டும். இந்தப் பூமி பூஜைக்குச் செல்ல லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நாம் கொரோனா வைரஸ் அங்கு பரவுவதை அனுமதிக்கலாமா?. ராமர் கோயில் கட்டுவது என்பது பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நிறைவேறுகிறது. இது மற்ற கோயில்களைப் போல் சாதாரணக் கோயில் அல்ல. இன்று நாம் கொரோனா வைரஸுடன் போராடி வருகிறோம். மதரீதியான கூட்டங்கள் கரோனா வைரஸ் பரவலால் தடை செய்யப்பட்டுள்ளன. என்னால் கூட அயோத்திக்குச் சென்று ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும். ஆனால், லட்சக்கணக்கான ராம பக்தர்களை நினைத்துப் பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : millions ,devotees ,Rama ,Uttam Thackeray ,Ram Temple Bhoomi Puja , Rama Devotees, Ram Temple, Bhoomi Pooja, Video, Uttam Thackeray
× RELATED இங்கிலாந்தில் ஒரே நேரத்தில்...