×

கொரோனா நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த விடாமல் தடுப்பதா?: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: கொரோனா நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த விடாமல், கெட்ட நோக்கத்துடன் அதிமுக அரசு தடுக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்குரிய வழி காட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடாமல் இருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான 3 கோடி ரூபாயில் சட்டமன்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி,  கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 1 கோடி ரூபாயை அரசு  நேரடியாக எடுத்துக் கொள்ளும் என்று தன்னிச்சையாக முதல்வர் அறிவித்தார். அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட 234 கோடி ரூபாய் மாநில அளவில் செலவிடப்படும் என்றார்.

இதுதவிர கொரோனா பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒதுக்கீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு, அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 1.75 கோடி ரூபாய் நிதியை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நெருக்கடியை அதிமுக அரசு உள்நோக்கத்துடன் ஏற்படுத்தியிருக்கிறது.  2020-21ம் நிதியாண்டு ஜூலை மாதம் வரை கடந்து விட்ட  நிலையில், இதுவரை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை. அதனால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய நிதியை ஆங்காங்கே மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாநகராட்சி ஆணையர்களும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். புதிதாகத் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அது தடையாக இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின் பரவல்  தீவிரமாக கிராமங்களைத் தொட்டுள்ள நேரத்திலும், சென்னையில் உச்சத்தில் இருக்கும் நேரத்திலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைப் பயன்படுத்த முடியாத ஒரு சூழலை அதிமுக அரசு வேண்டுமென்றே உருவாக்கியிருப்பது வேதனைக்குரியது.

தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியை தப்பித் தவறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் நற்பெயர் சம்பாதித்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்குடன் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இதுவரை வெளியிடாமல் இருக்கிறதா என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது. எனவே கொரோனா பேரிடர் காலத்தில் தொகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிட இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மருத்துவம், கல்வி உதவி நிதி: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகை மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இடஒதுக்கீட்டின் மீது பாஜ அரசு தாக்குதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய பாஜ அரசு செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 1993ல் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட க்ரீமிலேயருக்கு கணக்கிடப்படும் வருமான வரம்பு, கடந்த 27 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் துரோகம் போதாது என்று, இப்போது “நிகர சம்பளத்தை எடுத்துக் கொண்டு க்ரீமிலேயர் வருமானத்தைக் கணக்கிடுவோம்” என்று துடிப்பது, சமூகநீதிக்கு எதிரானது. சட்டபூர்வமான இடஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜ அரசு நடத்தும் அநியாயமான தாக்குதல். இதை நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. எனவே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : legislature ,Corona ,state ,MK Stalin , Corona, Member of the Legislature, Government, MK Stalin
× RELATED ஜெகன் மோகன் ஆட்சியில்...