×

எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு ஆஞ்சநேயருக்கு படையலிட்டு அரசுகளுக்கு விவசாயிகள் சாபம்: தர்மபுரி அருகே போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிபட்டி அருகே மாலக்காபாடி கிராமத்தில், எட்டு வழிசாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஆஞ்சநேயருக்கு படையலிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு சாபமிட்டனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாலக்காபாடி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசிக்கின்றனர். நல்ல மண்வளம் கொண்ட இப்பகுதியில் தென்னை,   மா, மூங்கில் மற்றும் மரவள்ளி கிழங்கு, சோளம் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதமாக இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக சேலம்- சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க அளவீட்டு பணிகள் நடந்து வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று விளைநிலங்களில் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார் தலைமையில்,  500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.

அங்கு மரவள்ளி கிழங்கு பயிர்களின் நடுவே நின்றபடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து அருகில் உள்ள வீரஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று படையலிட்டு, எட்டு வழி சாலை திட்டத்தை துரிதப்படுத்தக்கூடாது. இதை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் நாசமாக போக வேண்டும் என சாபமிட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எட்டு வழிச்சாலைக்கு எங்கள் நிலத்தை எடுக்க விடமாட்டோம். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு, விவசாயிகளுக்கு சாதகமாக வரவேண்டும் என வீர ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொண்டோம்,’ என்றனர்.


Tags : governments ,Anjaneyar ,Dharmapuri ,land , Eight lanes, land, Anjaneyar, peasants, Dharmapuri, struggle
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...