×

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா மரத்தடிக்கு மாறியது புதுவை சட்டசபை

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானது. இதனால் வரலாற்றில் முதல் முறையாக மரத்தடியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,500ஐ கடந்துள்ளது. நேற்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளரும், கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெயபாலுக்கு உடல்நிலை பாதித்ததால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீடு, குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 20ம் தேதியில் இருந்து சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் ஜெயபால் பங்கேற்றும், அவை புறக்கணிப்பிலும் ஈடுபட்டார். அவருடன் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்கேற்றனர். தற்போது, ஜெயபாலுக்கு தொற்று உறுதியானதால், சட்டசபையின் மைய மண்டபம் மூடப்பட்டு வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதன்காரணமாக,  சபாநாயகர் சிவக்கொழுந்திடம், முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, சட்டசபை வளாகத்தில் திறந்த வெளியில் அவையை நடத்தவும், பட்ஜெட் மீதான விவாதமின்றி நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கான ஒப்புதலை பெறவும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி,வரலாற்றில் முதல்முறையாக சட்டசபை வளாகத்தில் நுழைவு வாயில் அருகே மரத்தடியில் பந்தல், இருக்கைகள் அமைக்கப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு சட்டசபை கூடியது. சபாநாயகர் சிவக்கொழுந்து தொடக்கி வைத்து கூறுகையில், “எதிர்பாராத சூழலால் இங்கு நடத்துகிறோம். இதுவே சட்டமன்ற கூடமாக அறிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். எனவே, மானிய கோரிக்கைகளை விவாதத்துக்கு விடுகிறோம். பதில்கள் எழுத்து பூர்வமாக அனுப்புகிறோம்” என்று குறிப்பிட்டார். பட்ஜெட் மீது உறுப்பினர்களின் விவாதத்தை தொடர்ந்து, இறுதியாக நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு  ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து, பிற்பகல் 3.47க்கு சபையை காலவரையின்றி சபாநாயகர் சிவக்கொழுந்து ஒத்தி வைத்தார். எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதியானதால் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.


Tags : assembly ,NR ,Congress ,Congress MLA , NR. Congress MLA, Corona, New Delhi Assembly
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...