×

மேட்ரிமோனியல் மூலம் இளம்பெண்களை வலையில் வீழ்த்தி பல லட்சம் பணம், நகை மோசடி: கல்யாண மன்னன் கைது

பெரம்பூர்: மேட்ரிமோனியல் மூலம் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பல லட்சம் பணம், நகைகளை ஏமாற்றிய கல்யாண மன்னனை  போலீசார் கைது செய்தனர்.  சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் நேற்று முன்தினம் வடசென்னை கூடுதல் கமிஷனர் அருணிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது பெண் திருமணத்திற்காக மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து வந்ததாகவும், அதில் அறிமுகமான ராகேஷ் ஷர்மா என்பவர் தனது பெண்ணை  திருமணம் செய்வதாக கூறி ரூ.5.5 லட்சம், 20 சவரன் நகை  உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு, தற்போது தனது மகளை  வேண்டாம் என்று கூறுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த புகார் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டது. அப்போது, ராகேஷ் ஷர்மாவின் மேட்ரிமோனியல் ஐடியை போலீசார் கண்காணித்தபோது, அவர் ஒரு சயின்டிஸ்ட் எனவும், 28 வயது ஆகிறது என்றும், மாதம் பல லட்சம்  ரூபாய்  சம்பாதித்து வருவதாகவும், அதில் பதிவிட்டிருந்தார்.மேலும் திருமணத்திற்கு பெண் தேடுவதுபோல், பல பெண்களுடன் பேசி வந்தது தெரியவந்தது. குறிப்பாக  வசதியான பெண்கள், திருமணமாகி விவாகரத்தான பெண்கள் ஆகியோரை தேர்வு செய்து அவர்களிடம் பேசி வந்துள்ளார். இதையடுத்து, திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வரும் ராகேஷ் ஷர்மாவை, போலீசார் பிடித்து விசாரித்தினர். அதில்  பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

ராகேஷ் ஷர்மா (35) முதலில் மேட்ரிமோனியலில் பதிவு செய்துள்ள வசதியான பெண்களுக்கு ரிக்வெஸ்ட் தருவார். அதன் பிறகு அவர்கள் ஓகே என்று சொன்னவுடன் அவர்களது தொலைபேசி எண்ணை வாங்கி பேசி, திருமணம் செய்வதாக கூறுவார். பின்னர், இனிக்க இனிக்க பேசி பல பெண்களிடம் இருந்து நகைகளையும், பல லட்சங்களையும் பெறுவார். பின்னர், சில நாட்களில் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி அவர்களை பிடிக்கவில்லை, என கூறிவிட்டு ஏமாற்றிவிடுவார்.  சென்னை மட்டுமின்றி கோயம்புத்தூர், பெங்களூரு, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பல பெண்கள் இவரிடம் ஏமார்ந்துள்ளனர். 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் 30 சவரன் நகை உள்ளிட்டவற்றை ராகேஷ் வர்மா ஏமாற்றியுள்ளார். அதை வைத்து தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் இடம் மற்றும் கார் வாங்கி உள்ளதும் தெரிந்தது. இவருக்கு  ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.  கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து, தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக  கத்தாரில் வேலை செய்துவிட்டு கடந்த ஜனவரி மாதம் தான் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார் ராகேஷ் ஷர்மா.

இங்கு வந்தவுடனே  மேட்ரிமோனியில் பதிவு செய்து கடந்த 7 மாதங்களாக பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.  மேலும் அடிக்கடி தனது மொபைல் நம்பர்களை மாற்றி வந்துள்ளார்.  இதற்காக பல ஐடிகளை தயார் செய்து அதற்காக  தனித்தனியாக பணமும் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ராகேஷ் ஷர்மா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் கைது செய்யப்பட்ட விவரம் அனைவருக்கும் தெரிந்தால்தான் எத்தனை பெண்கள் ஏமாற்றப்பட்டனர், எவ்வளவு பணம் நகை ஏமார்ந்து உள்ளார்கள் என்பது குறித்து முழு விவரம் வெளியே  தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.   

போலீசாரிடம் கதறல்
ராகேஷ் ஷர்மாவை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, அவரது செல்போனுக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. போலீசார் அதை  எடுத்து பேசியபோது மறுமுனையில் பல பெண்கள் பேசியுள்ளனர். அப்போது போலீசார், ராகேஷ் ஷர்மா ஒரு மோசடி நபர். அவன்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்  என்று கூறியதும் அழைப்பில் வந்த பல  பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை கூறி அழுதுள்ளனர்.  மேலும் இதுகுறித்து  புகார் செய்ய அழைத்தபோது எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, அதனால் இந்த  விஷயத்தை  விட்டு விடுங்கள் எனவும் கூறியுள்ளனர்.

முழுமையாக விசாரிக்க வேண்டும்
புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா இதுபற்றி கூறுகையில், ‘‘மேட்ரிமோனியில்  வரன் தேடுபவர்கள், பெண் கேட்டு வருபவர்களிடம் திருமணத்திற்கு முன்பே நகை, பணம் உள்ளிட்டவற்றை கொடுக்க கூடாது. முழுமையாக விசாரித்து அதன் பிறகு வரன்களை தேர்ந்தெடுத்தால் இதுபோன்ற ஏமாற்றங்களை தவிர்க்கலாம்’’, என்றார்.

Tags : Kalyana Mannan ,teenagers ,girls , Matrimonial, teenagers, money, jewelry, fraud, marriage king arrested
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு