×

திருவள்ளூர் நகரில் அடுத்தடுத்து 17 கடைகளின் பூட்டு உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் அடுத்தடுத்து 17 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மாலை 6 மணிக்கு மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், போக்குவரத்து நிறைந்த திருவள்ளூர் ஜெ.என்.சாலையில், தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பேன்சி ஸ்டோர், பேக்கரி, டீக்கடை, வி.எம்.நகரில் ஜெ.ஜெ.சாலையில் உள்ள மளிகை கடை, டீக்கடை, எம்ஜிஆர் நகரில் 3 கடைகள், என்ஜிஓ காலனியில் 5 கடைகள், விவேகானந்தர் தெருவில் ஒரு கடை என மொத்தம் 17 கடைகள் உள்ளன.

இதற்கிடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் இந்த கடைகளின் பூட்டுகளை உடைத்து, கல்லாவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதனையடுத்து, நேற்று காலை வியாபாரிகள் கடைகளை திறந்து பார்த்தபோது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் அனைத்து கடைகளிலும் பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை. 17 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ₹50 ஆயிரம் வரை கொள்ளையர்கள் திருடிச் சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த 17 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருவள்ளூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Tags : Robbers ,shops ,CCTV Robbers break lock ,Tiruvallur ,CCTV , Tiruvallur Nagar, 17 shops, lock, robbery, CCTV
× RELATED கடலூர் அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை