×

2 ஏட்டு உள்பட 5 போலீசாருக்கு கொரோனா: மதுராந்தகம் காவல் நிலையம் மூடல்

மதுராந்தகம்: மதுராந்தகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 ஏட்டு உள்பட 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையம் மூடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில், 2வது இடத்தை பிடித்துள்ள இந்த மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து விட்டது. இதனால், பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். குறிப்பாக, கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், வருவாய் துறையினர், போலீசார், பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் அச்சத்துடன் பணியாற்று கின்றனர்.

இந்நிலையில், மதுராந்தகம் காவல் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். கடந்த சில நாட்களுகளுக்கு முன், இந்த காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2 தலைமை காவலர்கள் உள்பட 5 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
இதை தொடர்ந்து, 5 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், மதுராந்தகம் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூடிவைத்து, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்த காவல் நிலையம் மூன்று நாட்களுக்கு மூடப்படும். அதுவரையில் அதே பகுதியில் உள்ள இந்து அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காவல் நிலையம் செயல்படும் என போலீசார் தெரிவித்தனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கத்தில் 8, மாம்பாக்கத்தில் 2, பையனூரில் 3, பொன்மாரில் 2, தண்டலத்தில் 4, படூரில் 2, ஏகாட்டூரில் 3, ஆலத்தூரில், மேலக்கோட்டையூரில் தலா 1 என 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதேபோன்று திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய கிராமங்களில் கடந்த 2 நாட்களில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் ஊழியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் கடந்த 6 நாட்களில் 150க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, காஞ்சிபுரம் நகராட்சியில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1800ஐ கடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 70 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சியில் நேற்று 187 பேர்,  ஒன்றியத்தில் 18, பெரும்புதூரில் 27, வாலாஜாபாத்தில் 53, உத்திரமேரூரில் 52, குன்றத்தூரில் 39, மாங்காட்டில் 14,  அய்யப்பன்தாங்கல், கோவூரில் தலா 8, திருமுடிவாக்கத்தில் 7. ஆதனூரில் 4, படப்பையில் 3, கெருகம்பாக்கம், சென்னகுப்பத்தில் தலா 2, மவுலிவாக்கம், கொளப்பாக்கம், பரணிபுத்தூர், சிறுகளத்தூர், மலையம்பாக்கம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 1 என மொத்தம் 432 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை 70,  பாதிப்பு எண்ணிக்கை 6703 ஆக உயர்ந்துள்ளது. செய்யூர்: செய்யூர் தாலுகா ஓணம்பாக்கம் கிராமத்தில் ஒரே குடும்பத்தில், கணவன், மனைவி, 2 மகன்கள் மற்றும்  உறவினர் என 5 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. திருவாத்தூரில் 29 வயது, அணைக்கட்டில் 34 வயது, விழுதமங்கலத்தில் 24 வயது கொண்ட வாலிபர்களுக்கும் நேற்று தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடையாளப்படுத்துவதில் பாரபட்சம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  சில பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை  அதிகாரிகளிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, தங்கள் வீட்டின்முன் மெட்டல் ஷீட் அடிக்காமல் விட்டுள்ளனர்.

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்து அனைவரும் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால், கொரோனாவின் தாக்கம் குறையாமல் நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டாக்டர்களையும் விட்டு வைக்கவில்லை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 11764 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 8787 பேர் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் கொரோனாவால் 4 பேர் இறந்தனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 222 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு மற்றும் மருத்துவமனையில் பணியாற்றிய 45 டாக்டர்கள், 60 செவிலியர்களுக்கு கொரோனா ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் பீதி நிலவுகிறது.

Tags : policemen ,Corona ,police station closure ,Madurantakam , 5 police, Corona, Madurantakam police station, closure
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு