×

தேர்தலை கருதி அதிமுகவில் அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் புதிதாக 31 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி, ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் 31 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட கட்சி தலைமை முடிவு செய்தது. கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது கட்சியின் நலன் கருதி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். எனவே மாவட்ட செயலாளர்களை மாற்றுவது குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பிரிக்கப்பட்ட மாவட்டங்களில், அதிமுக அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்கள் உருவாக்கி அதற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிப்பது என முடிவு செய்தனர். அதற்கான பட்டியலை கட்சியின் மூத்த தலைவர்களும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தயார் செய்தனர். இதற்கான பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் கடந்த 3 மாதங்களாக நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக நேற்று வெளியிட்டனர்.  

இந்த பட்டியலில் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை கட்சி ரீதியாக 3 ஆக பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளராக திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்திலிருந்த சோழிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளை பிரித்து சென்னை புறநகர் மாவட்டம் என உருவாக்கப்பட்டு அதற்கு மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் 5 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக சிறுணியம் பலராமன் எம்எல்ஏ, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக அலெக்சாண்டர் எம்எல்ஏ, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது. இதற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.சி.வீரமணி பதவி வகித்து வந்தார். தற்போது இந்த மாவட்டம் 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளராக வேலழகன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக ரவி எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளரான லட்சுமணன் என்பவருக்கு கேட்டு வந்தார். ஆனால் அமைச்சர் சி.வி.சண்முகம் மாவட்டத்தை கட்சி ரீதியாக பிரித்தால் பிளவு ஏற்பட்டு விடும் என கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் 6 தொகுதிகளை பிரிக்காமல் விழுப்புரம் மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக முதல்வர் ஆதரவாளரான குமரகுருவும் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அர்சுணன் எம்எல்ஏவும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அருண்குமார் எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட செயலாளராக கப்பச்சி வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட  செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோன்று நாகப்பட்டிணம் மாவட்ட செயலாளராக அமைச்சர் ஓ.எஸ்,.மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக செந்தில்நாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நத்தம் விஸ்வநாதனும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. எனவே திருநெல்வேலி மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட செயலாளராக தச்சை கணேச ராஜாவும், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக கிருஷ்ண முரளியும், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக செல்வமோகன் தாஸ் பாண்டியன் எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கிருஷ்ண முரளி, மறைந்த முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன். அவரது குடும்பத்திற்கு தற்போது மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி.கே.மோகன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்துள்ளனர். அதேபோன்று, வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு செயலாளர்கள் பட்டியலில், கருப்பசாமி பாண்டியன், திருப்பூர் சிவசாமி, இசக்கி சுப்பையா, புத்திசந்திரன், ரத்தினவேல், மருதராஜ், பி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி கோ.அரி, வாலாஜாபாத் கணேசன், ஆசைமணி, சீனிவாசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அமைப்பு செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக பரமசிவம் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, இணை செயலாளர்களாக இளவரசன், குமாரசாமி, தண்டரை மனோகரன், துணை செயலாளராக துரைமுருகன், புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக சிங்காரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக மனோகரன் எம்எல்ஏவும், மகளிர் அணி இணை செயலாளராக கணிதா சம்பத், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல், விவசாயப் பிரிவு இணை செயலாளர்களாக முருகமலை சீனிவாசன், ஓவிஆர். ராமச்சந்திரன், மருத்துவ அணி இணை செயலாளராக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், தென்காசி தெற்கு மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளராக கே.ஆர்.பி.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 7 பேருக்கு பதவி
ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ள அருண்குமார், எஸ்.ஆர்.கே.அப்பு, பரஞ்ஜோதி, சோமசுந்தரம், கந்தன், குமார், செந்தில்நாதன் ஆகிய 7 பேர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக மாறிவிட்டார். மேலும் பலர் இரு அணியிலும் இல்லாமல் உள்ளனர்.



Tags : district secretaries ,OPS ,AIADMK ,Edappadi ,announcement , AIADMK, 31 District Secretaries, Edappadi, OBS
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...