×

நட்பு நாடுகளுக்கு விற்பனை செய்யும் வகையில் டிரோன் ஏற்றுமதி விதிமுறையை தளர்த்தியது அமெரிக்கா: இந்தியாவுக்கு முக்கியத்துவம்

வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கும் ஆளில்லா விமானங்களை (டிரோன்) ஏற்றுமதி செய்யும் வகையில், தனது நாட்டு விதிமுறையில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் தளர்வு செய்துள்ளது. அமெரிக்கா பல்வேறு உயர்ரக டிரோன்களை தயாரித்துள்ளது. இவைகளை இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விற்று வருகிறது. சமீபத்தில், இந்தியாவுக்கும் நவீன டிரோன்கள் விற்கப்படும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, டிரோன் ஏற்றுமதி விதிமுறையில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் நேற்று புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய கொள்கையின்படி, மணிக்கு 800 கிமீ வேகத்திற்கு கீழ் பறக்கும் டிரோன்கள் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பின் (எம்டிசிஆர்) கீழ் வராது என தளர்வு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான உதவி இணை அமைச்சர் கிளார்க் கூப்பர் கூறுகையில், ‘‘இந்த கொள்கை மாற்றம், எங்கள் நட்பு நாடுகளுக்கு உதவக்கூடும். அவர்களின் தேசிய பாதுகாப்பு மற்றும் வணிக தேவையை பூர்த்தி செய்வதுடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களையும் மேம்படுத்துகிறது,’’ என்றார்.

அதே சமயம், ஹைபர்
சோனிக், ஆளில்லா போர் வான்வழி வாகனங்கள், கப்பல் ஏவுகணைகள் போன்ற அதிநவீன டிரோன்களுக்கு இந்த தளர்வு பொருந்தாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு ஆயுதப் பரவலை தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மாற்றம், சமீபத்தில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, நட்பு நாடுகளின் பலத்தை அதிகரிப்பதற்கு அமெரிக்கா செய்துள்ள யுக்தியாக கருதப்படுகிறது.

40 ஆண்டுக்கு பிறகு சீன தூதரகம் மூடல்
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடும் மையமாகவும், உளவு பார்க்கும் இடமாகவும் செயல்படுவதால் அதனை 72 மணி நேரத்திற்குள் மூட அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள சீன தூதரகம் நேற்று முன்தினம் மூடப்பட்டது. தூதரகத்தில் இருந்து சீன அதிகாரிகள் வெளியேறினர். அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். சுமார் 30 பேர் சீன தூதரக மூடலை கொண்டாடும் விதமாக அங்கு பதாகைகள் ஏந்தி நின்றனர்.

72 மணி நேர கெடு மாலை 4 மணியுடன் முடிந்தபிறகு வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் சீன தூதரக அலுவலகத்திற்குள் சென்று ஆய்வு செய்தார். ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட நிலையில் அமெரிக்காவின் சீன தூதரகத்தின் எண்ணிக்கை சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ என 4 ஆக குறைந்துள்ளது.

விதிமுறை மாற்றம் ஏன்?
அமெரிக்காவின் எம்டிசிஆர் விதிமுறை, 30 ஆண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டது. இதுவரையில், இதில் எந்த மாற்றமும்செய்யப்பட்டது கிடையாது. தற்போது, முதல் முறையாக நட்பு நாடுகளுக்கு உதவும் வகையில், மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.‘நவீன காலத்திற்கு ஏற்ப இத்தகைய மாற்றங்கள் அவசியம்,’ என அதிபர் டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.

Tags : US ,India ,countries , Allies, Sales Drone, USA, India
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...