×

மார்க்கெட், கடைகளில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி அரசின் விதிகளை மறந்த பொதுமக்கள்

* அலட்சியத்தை தொடருவது கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்
* மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள பொதுமக்கள் மாஸ்க் அணிந்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் சமூக இடைவெளி என்பதை மறந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா பரவல் மீண்டும் உச்ச நிலையை அடையும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் சென்னை இயல்பு நிலைக்கு மாறியுள்ளது. கடைகள், ஜவுளி நிறுவனங்கள், தங்க நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கிற்கு கிடைத்த பலனாக நோய் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கணித்துள்ளனர். ஆனால் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி உள்ளதால் அரசின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு செல்கின்றனர். இதுபெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  

 சென்னை மக்கள் தற்போது மாஸ்க் அணிவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஆனால் சமூக இடைவெளி, சுத்தமாக கைகழுவுவது போன்றவற்றை கடைபிடிப்பதில் சுணக்கம் காட்டுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது அவர்களுக்கு நோய் தொற்றை உருவாக்கிவிடும். அதேபோன்று வியாபார ஸ்தலங்களில் மாஸ்க் அணிந்து சென்றாலும் சமூக இடைவெளியை யாரும் கடைபிடிப்பதில்லை.   வியாபார நிலையங்களில் அரசின் விதிமுறைகளை சென்னை மக்கள் காற்றில் பறக்கவிட்டு மீண்டும் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. சென்னையில் இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்று மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது.  

 இதுகுறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில் மக்கள் ஏனோ தயக்கம் காட்டி வருகின்றனர். அதன் விளைவாக அவர்களுக்கு கொரோனா தனது கோர முகத்தை காட்டிவிடுகிறது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள சென்னை மக்கள் வியாபார ஸ்தலங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது முக்கியம். கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும். ஆனால் பலர் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றனர். எங்கு சென்றாலும் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினால் மீண்டும் கொரோனா சென்னையில் கோர தாண்டவம் ஆடிவிடும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : public ,shops ,state , Market, shops, social space, corona
× RELATED கண்மாய், குளங்களில் கால்நடைகள்...