×

கொரோனா சூழ்நிலை குறித்து முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை: மீண்டும் முழு ஊரடங்கா?

புதுடெல்லி: கொரோனா சூழ்நிலை குறித்து காணொலி காட்சி மூலமாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இம்முறை உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொடூர கொரோனா வைரசால், உலகளவில் இதுவரை 1.57 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.40 லட்சம் பேர் வரை இறந்துள்ளனர். அதே போல், இந்தியாவிலும் 13.37 லட்சம் பேர் பாதித்தும், 31 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்.

இதற்கு முன்பு, கடந்த மாதம் 17ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, `மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போதைய தேவை, எதிர்கால தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும். கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மாற்றத்தில், மின்நுகர்வு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியாவிற்கு வளமான எதிர்காலம் உள்ளது,’ என்றார். கடந்த மே மாதம் முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், உரங்கள் விற்பனை இரு மடங்காக அதிகரித்திருப்பது காரீப் பருவத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டுகிறது. இரு சக்கர வாகன உற்பத்தி, சில்லறை விற்பனையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆகியவை ஊரடங்கிற்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது.

சுங்க கட்டண வசூல், இறக்குமதி ஆகியவை கடந்த 3 மாதங்களாக வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் அவைகளும் அதிகரித்துள்ளன,’ என்று பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் மீண்டும் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். அப்போது, கொரோனா தொற்றின் தற்போதைய சூழ்நிலை குறித்து அவர் ஆலோசிக்க இருக்கிறார். அப்போது, தொற்று அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் ஊரடங்கு 3.0-ஐ அவர் அமல்படுத்துவாரா? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கை மோடி அறிவித்தார். அதன் பிறகு, இது மாநில முதல்வர்களுடன் அவர் நடத்தும் 7வது கூட்டமாகும். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.



Tags : chief ministers ,Corona ,chiefs , Corona, Chiefs, Prime Minister, Full Curfew
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...