×

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொரோனா

பிரிட்டோரியா: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென் ஆப்ரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில், தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி  செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  அதற்கான முதல் கட்ட பயிற்சி முகாம் நாளை பிரிட்டோரியாவில் தொடங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள வீராங்கனைகள், அணி  ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என 34 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 2 வீராங்கனைகள், ஒரு ஊழியர் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அதனையடுத்து முகாமில் இருந்து விலகியுள்ள 3 பேரும்  தங்களை தனிமைப்படுத்துமாறு  கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் அமைப்பான  தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்(சிஎஸ்ஏ), ‘தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 3 பேருக்கும் லேசான அறிகுறிகள் கூட இல்லை.

எனினும் எங்கள் மருத்துவக் குழு அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும். அவர்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.  வீரர்கள், வீராங்கனைகள் மீண்டும் பயிற்சிக்கு திரும்பவும், விளயைாடவும்  சிஎஸ்ஏ மருத்துவக் குழு வகுத்த நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்களின் பெயர்களை சிஎஸ்ஏ வெளியிடவில்லை. முதல் கட்ட பயிற்சி முடிந்ததும் 2வது கட்ட பயிற்சி முகாம் ஆக.16ம் தேதி தொடங்குகிறது. அப்போதும் 2வது முறையாக  பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் மீண்டும் கொரோனா சோதனை செய்யப்படும். அதன் பிறகு இங்கிலாந்து செல்லும் தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி அங்கு 2 டி20, 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

Tags : cricketers ,Corona ,South African , South African cricketers, Corona
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?