×

குறைந்த பயணிகள், வருமானம் இல்லாத 6,000 ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே முடிவு: ஊரடங்குக்கு பிறகு அமல்

புதுடெல்லி: ஊரடங்கு முடிந்த பிறகு, வருமானம் இல்லாத மற்றும் குறைந்த பயணிகள் மட்டுமே பயன்படுத்தும் ரயில் நிலையங்களில், 6 ஆயிரம் நிறுத்தங்களை கைவிட ரயில்வே திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, இன்று வரையில் ரயில்வே சேவை தொடங்கப்படவில்லை. புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டுமே ஷெராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஊரடங்குக்குப் பிறகு ரயில்களை இயக்குவதற்கான புதிதாக கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் தயாரித்துள்ளது.  இதன் முக்கிய அம்சமாக, வருமானம் இல்லாத மற்றும் குறைவான பயணிகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்தும் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேவையற்ற நிறுத்தங்கள் நீக்கப்பட உள்ளன.

இதற்காக, ஒரு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதாக இருந்தால், அங்கு குறைந்தபட்சம் 50 பேர் ஏறவும், இறங்கவும் வேண்டும் என்பது அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுத்தங்களை தவிர்க்க வேண்டியிருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், ‘‘புதிய கால அட்டவணை அமலுக்கு வந்தால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்படும். சாதாரண ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்போது, இந்த புதிய கால அட்டவணை அமல்படுத்தப்படும். நிறுத்தங்கள் நீக்கப்படும் இடங்களில், பிற ரயில் சேவைகள் இருப்பதை ரயில்வே உறுதி செய்யும்,’’ என்றார்.

வாய்ப்பை பயன்படுத்திய ரயில்வே
ஊரடங்கு வாய்ப்பினை பயன்படுத்தி ரயில்வே நிர்வாகம்,  82 பாலங்களை புனரமைத்துள்ளது. 48 லெவல் கிராசிங்குகளை அகற்றிவிட்டு சுரங்கப் பாதைகள், 16 நடை மேம்பாலங்களை அமைத்துள்ளது. பழைய நடை மேம்பாலங்களை அகற்றுவதற்கான 14 திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. — நாடு முழுவதும் மொத்தம் 7,312 ரயில் நிலையங்கள் உள்ளன. — ஊரடங்குக்கு முன்பு, நாடு முழுவதும் 13,523 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

Tags : Railway ,curfew , Low passenger, revenue, 6,000 train stops, railways, curfew
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!