×

தமிழகம் முழுவதும் நாளை கடைசி கட்ட தளர்வில்லா ஊரடங்கு

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை தமிழகத்தில் கடைசி கட்ட தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தபடவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மே 31ம் தேதி வரை பல்வேறு கட்டமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு ஊரடங்கு விதிகளின் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 1ம் ேததி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அதேநேரம், ஜூலை 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 5,12,19 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை கடைசி கட்ட தளர்வில்லா ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை மறு நாள் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்படும். மருத்துவத்தை தவிர எந்த வித அத்தியாவசிய தேவைக்கும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

சென்னை உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் மூடப்படும். இதைபோல், மாவட்ட தலைநகரங்களில் உள்ள காய்கறி, பழம், பூ மற்றும் மீன் மார்க்கெட்கள் என அனைத்தும் மூடப்படுகிறது. இதை அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் நேரடியாக பார்வையிட்டு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வெளியே சென்றால் அவர்கள் மீது எந்த நிபந்தனையும் இன்றி வழக்கு பதிவு செய்யப்படும் எனற் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரையில் போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 198 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் தடுப்பு வைத்து அடைக்கப்படும். இந்த சாலைகளுடன் சேரும் இணைப்பு சாலைகளும் அடைக்கப்படும்.  இந்த சாலைகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதைத்தவிர்த்து மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அந்தந்த மாவட்ட துணை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டங்களில் ஊரடங்கு அதிகரித்து வரும் சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி கோவை, வில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை காசிமேடு, நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட் உள்ள சென்னை அனைத்து இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இறைச்சிகளை வாங்கி சென்றனர். சென்னையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமையை மற்றொரு ஞாயிற்று கிழமையாக மாற்றி பொதுமக்கள் இறைச்சி கடைகளில் அலைமோதி கொண்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : phase ,Tamil Nadu , Tamil Nadu, last phase of unrelenting curfew
× RELATED தமிழகம் - கேரளா இடையே இன்று 2ம் கட்ட நதிநீர் பேச்சு