31ம் தேதியுடன் 6ம் கட்ட ஊரடங்கு நிறைவு; 1ம் தேதியில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்குமா?... கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்வோர் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: 6ம் கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமுலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, தற்போது 6ம் கட்ட ஊரடங்கு அமுலில் உள்ளது. இதில் 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வந்தன. குறிப்பாக மண்டலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்கியது. ரயில் போக்குவரத்தும் இருந்தது. கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருந்தன.

வணிக வளாகங்கள் தவிர, ஏனைய பெரிய ஜவுளிக்கடைகள், நகை கடைகள் திறக்கப்பட்டன. தொழிற்சாலைகளும் இயங்க தொடங்கின. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கொரோனா பரவலும் அதிகரித்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ரகசியமாக பலர் மாவட்டங்களுக்குள் நுழைந்தனர். இதனால் சென்னை மண்டலத்தை போல், மற்ற மண்டலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் திணறி போன தமிழக அரசு, பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜூன் 25ம் தேதி முதல் மண்டலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. மாவட்டங்களுக்குள் மட்டும் போக்குவரத்து இருந்தது.

ஜூன் 29ம் தேதி முதல் ரயில் போக்குவரத்தும் நிறுத்தினர். இந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 6ம் கட்ட ஊரடங்கு தொடங்கிய நிலையில், மாவட்டத்துக்குள் இயங்கி வந்த பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால்  கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு உள்ள தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு பணிக்கு வரக்கூடியவர்கள் பாதிக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. மாவட்டங்களுக்கு இடையே செல்லவும் இ பாஸ் வேண்டும் என்பதால், குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வியாபாரிகள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பைக்கில் வருபவர்களும் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி சோதனை பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். 6ம் கட்ட ஊரடங்கில் கடைகள் திறப்பு நேரமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டது. பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தம், கடைகள் திறப்பு நேரம் குறைப்பு என இருந்த போதும், சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து வந்து குவிந்த கொேரானா நோயாளிகளால் குமரி மாவட்டத்திலும் கொரோனா உச்ச கட்டமாக உள்ளது. இந்த நிலையில் வருகிற 31ம் தேதியுடன், 6ம் கட்ட ஊரடங்கு முடிகிறது. எனவே ஆகஸ்ட் 1ம் தேதி 7ம் கட்ட ஊரடங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பஸ் போக்குவரத்து தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் இருந்து பிற மாவட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் பலர், வேலையிழந்துள்ளனர். பஸ் நிலையங்களில் உள்ள டீ கடைகள், ஓட்டல்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் என சாதாரண தொழிலாளர்கள் தற்போது பெரும் துயரத்தில் உள்ளனர். இவர்கள் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்து இதுவரை எந்த வித அறிவிப்பும் வர வில்லை. ஆனால் பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. டிரைவர்கள், கண்டக்டர்கள் பட்டியலையும் தயார் நிலையில் வைத்து உள்ளோம் என்றனர்.

Related Stories:

>