×

நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி நூதன முயற்சி: சைக்கிளில் வீதி, வீதியாக சென்று டீ விற்பனை செய்த வழக்கறிஞர்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சையத்ஹாரூன் (69). இவர், கடந்த 41 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு திருநகர் காலனி பகுதியில் இருந்து நேற்று வழக்கறிஞர் உடையில் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று டீ விற்றார். திருநகர் காலனியில் துவங்கி மூலப்பட்டறை, கே.என்.கே. ரோடு, பஸ் ஸ்டாண்ட், மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு, சம்பத் நகர் வழியாக நீதிமன்ற வளாகம் வரை சென்று டீ விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சையத்ஹாரூன் கூறுகையில், `கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதமாக நீதிமன்றங்கள் மூடி கிடக்கின்றன. ஆன்லைன் மூலமாக வழக்குகளை நடத்துகின்றனர். இதனால், வழக்குகளை விரைந்து முடிக்க முடியாது. ஏராளமான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. வழக்கறிஞர் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும், தலா ஒரு லட்சம் ரூபாய் தனிநபர் கடன் வழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள், கடைகள், மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : lawyer ,courts ,street , Court, Innovative Initiative, Tea Selling Lawyer
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...